

சில ஆண்டுகள் கழித்து அரசியலுக்கு வருவேன் என்றும், நான் ஆண்களுக்கு எதிரானவள் அல்ல எனவும் வரலட்சுமி சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.
பி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள படம் 'டேனி'. திரையரங்குகள் திறக்கப்படாத சூழலில் ஆகஸ்ட் 1-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சந்தானமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் வரலட்சுமி சரத்குமாருடன் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஒரு நாயும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
இந்தப் படம் தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நாயகி, வில்லி என நடிக்கிறீர்கள், சேவை செய்கிறீர்கள், பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறீர்கள். அடுத்தாண்டு தேர்தல் வருகிறது. மக்கள் செல்வி அரசியலில் ஈடுபடுவாரா?
அடுத்தாண்டு எல்லாம் இல்லை. ஆனால், இன்னும் சில ஆண்டுகள் கழித்து அரசியலுக்கு வருவேன். இப்போது இல்லை. அப்பாவின் கட்சி தொடங்கி யாருடைய கட்சியிலும் இணைய வாய்ப்பில்லை. இப்போதைக்கு சேவ் சக்தியில் மட்டும் இருக்கிறேன். அரசியலுக்கு உள்ளே எந்தவித பயமும் இன்றி குரல் கொடுக்கும் நபர்கள் தான் நமக்கு தேவை.
பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உங்கள் கட்சி இருக்குமா?
நான் ஆண்களுக்கு எதிரானவள் அல்ல. சாத்தான்குளம் விவகாரத்தில் ஒட்டுமொத்த காவல்துறையையே தப்பு சொன்னார்கள். அது தவறு. சில பேர் செய்த தவறு அது. அனைத்து ஆண்களையும் பாலியல் குற்றவாளிகள் என்று சொன்னால் எப்படி தவறோ, அது போல தான் ஒட்டுமொத்த காவல்துறையையும் சொல்வது. பெண்கள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் துணிச்சலாகப் பேசுபவர்கள் அரசியலில் தேவை என்பதே என் கருத்து.