

கடந்த 24 மணி நேரத்தில் அதிகம் பேர் பார்த்த யூடியூப் வீடியோக்கள் பட்டியலில் 'செல்லம்மா' பாடல் இடம்பெற்றுள்ளது.
'ஹீரோ' படத்தைத் தொடர்ந்து 'அயலான்' மற்றும் 'டாக்டர்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் முதலில் 'டாக்டர்' படம் முதலில் திரைக்கு வரவுள்ளது. 'கோலமாவு கோகிலா' இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். கே.ஜே.ஆர் நிறுவனம் இதன் உரிமையைக் கைப்பற்றியுள்ளது.
இந்தப் படத்திலிருந்து 'செல்லம்மா' என்ற பாடலை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் துவக்கியது படக்குழு. நேற்று (ஜூ;லை 16) மாலை வெளியான இந்தப் பாடல் பெரும் வைரலானது. பாடல் வெளியான 24 மணி நேரத்தில் 25 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
அதுமட்டுமன்றி, சர்வதேச அளவில் அதிகம் பேர் பார்த்த யூடியூப் வீடியோக்கள் பட்டியலில் 'செல்லம்மா' பாடல் இடம்பெற்றுள்ளது. அந்த தரவரிசைப் பட்டியலில் 20-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் 'டாக்டர்' படக்குழு பெரும் உற்சாகமடைந்துள்ளது. சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இந்தப் பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.
ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் இந்தப் படத்துக்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.