

'தனி ஒருவன்' திரைப்படம் மிகப்பெரிய அளவுக்கு வரவேற்பு பெற்றிருப்பதால், ஏ.ஜி.எஸ் நிறுவனம் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி, தம்பி ராமையா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'தனி ஒருவன்'. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து, ஆகஸ்ட் 27ம் தேதி வெளியிட்டது.
'தனி ஒருவன்' திரைப்படம் மக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தமிழக அரசும் வரிச்சலுகை கொடுத்திருப்பதால், பெரிய அளவுக்கு வசூலும் செய்து வருகிறது. இதனால் ஏ.ஜி.எஸ் நிறுவனம் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி, "ஒவ்வொரு தயாரிப்பாளருமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெறும் படத்தை எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களே. 'தனி ஒருவன்' எங்களுக்கு அப்படியொரு படமாய் அமைந்துள்ளது. கடினமாக உழைத்த, படத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். முக்கியமாக சித்தார்த் அபிமன்யுவாக அற்புதமாக நடித்திருந்த அர்விந்த்சுவாமி அவர்களுக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.
ஊக்கமளித்து வரும் ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. இப்படியான தருணத்துக்காகத் தான் நாங்கள் உழைக்கிறோம். எங்களது முதுகெலும்பாய் இருந்து செயல்படும் விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் தரும் நிபந்தனையற்ற ஆதரவுக்கு நன்றி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.