தொடரும் 'விஸ்வாசம்' படத்துக்கான வரவேற்பு: இமான் நெகிழ்ச்சி

தொடரும் 'விஸ்வாசம்' படத்துக்கான வரவேற்பு: இமான் நெகிழ்ச்சி
Updated on
1 min read

ஒவ்வொரு முறையும் 'விஸ்வாசம்' ஒளிபரப்புக்குக் கிடைக்கும் வரவேற்பு தொடர்பாக இமான் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விஸ்வாசம்'. 2019-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி இப்படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியது. இதற்கு முன்பு 2 முறை ஒளிபரப்பியது. மூன்றாவது முறையாக ஜூலை 12-ம் தேதி மாலை ஒளிபரப்பியது. இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

பலரும் 'விஸ்வாசம்' படம் பார்க்கும்போது எடுத்த புகைப்படம் உள்ளிட்டவற்றைப் பகிர்ந்தார்கள். இதனால், முதல் முறை ஒளிபரப்பு போல சமூக வலைதளம் காணப்பட்டது.

இந்த வரவேற்பு தொடர்பாக இசையமைப்பாளர் இமான் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"ஒவ்வொரு முறை ‘விஸ்வாசம்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போதும் அது திரைப்பட வெளியீட்டைப் போல இருக்கிறது. நிறைய நேர்மறை எண்ணங்கள் மற்றும் அன்பு. ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு காட்சியின் பின்னணி இசையிலும் இந்தப் படத்தின் இசையில் என்னைப் பங்காற்ற வைத்ததற்கு சிவா, தியாகராஜன் மற்றும் நம் அன்பு அஜித் ஆகியோருக்கு நன்றி. இறைவன் கருணையானவன்."

இவ்வாறு இமான் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் பாடலாசிரியராகப் பணிபுரிந்த அருண் பாரதி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

" 'விஸ்வாசம்' சென்ற ஆண்டு வெளியானதா? இல்லை இந்த ஆண்டுதான் வெளியானதா? எனக் குழப்பமே வந்துவிட்டது. ஒவ்வொரு முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போதும் நேற்றுதான் படம் வெளியானது போல் ரசிகர்கள் கொண்டாடுவதும், தொலைபேசியில் அழைத்துப் பாராட்டுவதும் மிகுந்த உற்சாகம் தருகிறது. அன்பு நன்றிகள்".

இவ்வாறு அருண் பாரதி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in