

முதன் முறையாக 'பட்டணத்தில் பூதம்' மேடை நாடகத்தில் டால்பி ஒலியமைப்பை வைத்து புதுமை படைக்க இருக்கிறார்கள்.
'பொன்னியின் செல்வன்' நாடகத்தைத் தொடர்ந்து சென்னையில் 'பட்டணத்தில் பூதம்' நாடகம் நடைபெற இருக்கிறது. இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா வழங்கவிருக்கும் இந்நாடகம் செப். 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகள் நடைபெற இருக்கிறது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் ஆதரவுடன் நடைபெற இருக்கும் இந்நாடகத்தில் நாசர், பிரசன்னா, இயக்குநர் மனோபாலா, நாசர் மகன் லுத்புதீன்,பாடகி சின்மயி, பாடகர்கள் ராகுல் நம்பியார், பிளாஸி, ஜித்தேஷ், ஹரிஷ், ஸ்வேதா, நந்தினி ரவீந்திரன் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள்.
இந்த நாடகத்திற்காக ப்ரியன் எழுதியிருக்கும் 4 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் கார்த்திக் ராஜா. நாடகத்தில் பாடி, நடிக்க வேண்டியதிருப்பதால் பாடகர், பாடகிகளே நடிக்க இருக்கிறார்கள்.
இந்த நாடகம் குறித்து கார்த்திக்ராஜா "வெளிநாடுகள் போகும் போதெல்லாம் அங்கு நாடகங்கள் ரசிக்கப் படுவதைக் கண்டு வியந்து இருக்கிறேன். பிராட்வே ஷோ போன்றவை அங்கு பிரபலமானவை. 'லயன்கிங்' போன்ற கதைகள் படமாக வந்தாலும் நாடகமாகவும் ரசிக்கப்படுகின்றன.
சினிமா டிக்கெட் 50 டாலர், 80 டாலர் என்றால், நாடக டிக்கெட் 100 டாலர் 200 டாலர் ஏன் கடைசிநேரம் என்றால் 500 டாலர் வரை கொடுத்துக்கூட வாங்கிப் பார்க்கிறார்கள். இங்கு நான் ஆர்.எஸ். மனோகரின் நாடகங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன். சினிமா, நாடக உலகத்தை பாதித்தாலும் இன்றும் கூட 'பொன்னியின் செல்வன்' போன்ற நாடகங்கள் வெற்றி பெற்று வருகின்றன.
கிரேஸிமோகன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர் போன்றவர்களும் நாடகங்கள் நடத்துகிறார்கள். நாம் சினிமாவில் எவ்வளவு உயர்ந்தாலும் நாடகத்தை மறக்கக் கூடாது. எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் எப்படிப்பட்ட கதை நாடகமாக இருந்தால் பார்க்கப் பிடிக்குமோ அதையே 'பட்டணத்தில் பூதம்' நாடகமாக்கி இருக்கிறோம். 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' கதையை அடிப்படையாக்கி,அதன் தாக்கத்தில் கதை அமைத்து உள்ளோம்.எங்கள் எண்ணத்தில் எழுந்த இந்த முயற்சியை இவ்வளவு தூரம் நகர்த்திச் செல்ல உதவிய நடிகர் நாசரின் பங்கு மிகவும் பெரியது.
இதில் சஸ்பென்ஸ், திகில், சுவாரஸ்யம், கலகலப்பு ,பரபரப்பு எல்லாமும் இருக்கும். முதன் முதலில் டால்பி ஒலியமைப்பை மேடை நாடகத்தில் பயன்படுத்தி இருக்கிறோம் . இந்நாடகம் சினிமா போல திருப்தியும் 2 மணி நேரம் நேரடி மேஜிக் அனுபவமாக இருக்கும்விதத்தில் இதில் பல ஆச்சரியங்களும் தொழில்நுட்ப அசத்தல்களும் இருக்கும்.
ஒரு நாடகம் என்றால் அதில் பலரது உழைப்பு இருக்கும். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் பங்களிப்பும் உழைப்பும் இருக்கின்றன. இப்போதே சென்னையை அடுத்து கோவையிலும் பிறபகுதிகளிலும் நாடகம் நடத்த அழைப்புகள் வந்துள்ளன.இது நாடக உலகத்துக்கு எங்களின் சிறிய சமர்ப்பண முயற்சிதான்" என்று தெரிவித்தார் கார்த்திக்ராஜா