

நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன் தனது தந்தை குறித்து ஒரு கவிதை எழுதியுள்ளார்.
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் வரிசையில் தனித்தடம் பதித்தவர் நா.முத்துக்குமார். பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றிய அவர், சீமான் இயக்கிய ‘வீரநடை’ படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார்.
'காதல் கொண்டேன்', 'பிதாமகன்', 'கில்லி', 'கஜினி', 'நந்தா', 'புதுப்பேட்டை', 'காதல்', 'சந்திரமுகி', 'சிவாஜி', 'கற்றது தமிழ்', '7 ஜி ரெயின்போ காலனி', 'காக்காமுட்டை', 'தெறி' உள்ளிட்ட பல படங்களில் நா.முத்துக்குமார் எழுதிய பாடலகள் பெரிய வரவேற்பைப் பெற்றவை.
தமிழ் சினிமாவில் 92க்கும் மேற்பட்ட படங்களில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். 'தங்கமீன்கள்' படத்தில் இவர் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்காகவு, 'சைவம்' படத்தில் எழுதிய அழகே அழகே பாடலுக்காகவும் தேசிய விருதுகள் பெற்றார்.
''ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழிதேடி வந்தது, அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது'', ''காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்,காற்றிடம் கோபம் கிடையாது'', ''அலை கரையைக் கடந்த பின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி'','' என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா மண்ணில் வந்த நான் உன் நகலல்லவா'', ''பேசிப்போன வார்த்தைகள் எல்லாம் காலந்தோறும் காதினில் கேட்கும், சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா? உயிரும் போகும் உருவம் போகுமா?'' போன்ற தனித்தன்மையான வரிகளால் கவனம் ஈர்த்தவர் நா.முத்துக்குமார்.
4 ஆண்டுகளுக்கு முன்பு காற்றில் கரைந்து போன நா.முத்துக்குமாரின் 45-வது பிறந்த நாள் இன்று!
இந்நிலையில் நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன் தனது தந்தை குறித்து ஒரு கவிதை எழுதியுள்ளார்.
என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்
அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்!
என் தந்தையின் பாடல்கள் சொக்கத்தங்கம்
அவர் எங்கள் காட்டில் சிங்கம்!
என் தந்தையின் வரிகள் முத்து
அவர்தான் எங்களின் சொத்து!
என் தந்தையை எனக்கு ரொம்பப் பிடிக்கும்
அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்!
என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா
எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா!
எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள்தான் அப்பா
இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்திருந்தால் என்ன தப்பா?
-மழலைக் கவிஞர் ஆதவன் முத்துக்குமார்