

பெயருக்காக ஒரு படத்தில் நடிக்க முடியாது என்று நடிகை ஸ்ரேயா ரெட்டி தெரிவித்துள்ளார்.
விஷால் நடித்த 'திமிரு' மற்றும் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான 'வெயில்' உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர் ஸ்ரேயா ரெட்டி. அதற்குப் பிறகு விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு கூட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது வேல்மதி இயக்கத்தில் 'அண்டாவ காணோம்' படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் பல முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கில் தான் நடித்த படங்கள் குறித்து புகைப்படங்களுடன் சில ட்வீட்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா ரெட்டி. அதில் 'அண்டாவ காணோம்' படம் தொடர்பாக ஸ்ரேயா ரெட்டி வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
" 'அண்டாவ காணோம்' எப்போது ரிலீஸ் ஆனாலும் அது நிச்சயமாக காத்திருப்பின் பலனாக இருக்கும். அதன் கதை அபாரமானது. அது நாங்கள் உணர்ந்தவற்றை வெளிப்படுத்துவதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
ஏன் நான் அதிக படங்களில் நடிப்பதில்லை என்று என்னிடம் சிலர் கேட்கின்றனர். பெயருக்காக என்னால் ஒரு படத்தில் நடிக்க முடியாது. அந்தக் கதாபாத்திரத்துக்கு நான் பொருந்துவேன் என்று உண்மையில் நம்பினால் மட்டுமே நான் அதில் நடிப்பேன்".
இவ்வாறு ஸ்ரேயா ரெட்டி தெரிவித்துள்ளார்.