

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சன் பூரண நலம் பெற கமல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சனுக்கு நேற்றிரவு (ஜூலை 11) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பை நானாவதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அமிதாப்பின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அமிதாப் பச்சன் - அபிஷேக் பச்சன் இருவருக்குமே லேசான கரோனா அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசியல் பிரமுகர்கள், திரையுலகப் பிரபலங்கள், தொழில்துறை பிரபலங்கள் எனப் பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் அமிதாப் பச்சன் பூரண நலம்பெற வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இரண்டு பச்சன்களும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்த உடல்நலப் பிரச்சினைகளை இந்திய மருத்துவர்களாலும், அமிதாப் பச்சனின் தன்னம்பிக்கையாலும் கடந்து வரமுடியும் என்று நான் நம்புகிறேன். பிழைத்தலுக்கும், ஆரோக்கியத்துக்கும் மீண்டும் ஒரு அடையாளமாக மாற விரைவில் குணமடைந்து வாருங்கள்".
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.