

அமிதாப் பச்சனுக்குக் கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, தொலைபேசி வாயிலாக அவரிடம் நலம் விசாரித்துள்ளார் ரஜினி.
இந்தியாவில் கரோனா தொற்று சில மாநிலங்களைத் தவிர, இதர மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதனிடையே, இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகராக அமிதாப் பச்சனுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து மகன் அபிஷேக் பச்சனுக்குக் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருவருக்குமே லேசான அறிகுறிகள் மட்டுமே என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 10 நாட்களில் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவருமே கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கரோனா குறித்து அமிதாப் பச்சன் ட்வீட் செய்த சில விநாடிகளில், அவர் விரைவில் நலம் பெற வேண்டி பலரும் ட்வீட் செய்யத் தொடங்கினார்கள்.
சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, மம்மூட்டி, மோகன்லால், மகேஷ் பாபு, சிரஞ்சீவி என ஒட்டுமொத்த பிரபலங்களுமே அவருடைய ட்வீட்டுக்குப் பதிலளித்தனர். அமிதாப் பச்சன் வெளியிட்ட ட்வீட்டுக்கு ரீ-ட்வீட்டை விட வந்த பதில்களே அதிகம் என்பது நினைவுகூரத்தக்கது.
இதனிடையே, அமிதாப் பச்சனின் நெருங்கிய நண்பராக ரஜினிகாந்த் உடனடியாகத் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்துள்ளார். அப்போது அவருடைய உடல்நலம், மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்துக் கேட்டறிந்துள்ளார் ரஜினி.