சாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ரா விளக்கம்

சாத்தான்குளம் வீடியோ: சிபிசிஐடி எச்சரிக்கை; சுசித்ரா விளக்கம்
Updated on
2 min read

சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக தான் வெளியிட்ட வீடியோவை நீக்கினார் சுசித்ரா. அதற்கான விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கினை முதலில் சிபிசிஐடி விசாரித்து, சம்பந்தப்பட்ட காவல்துறையினரைக் கைது செய்தது. தற்போது சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தந்தை மற்றும் மகன் இறந்தவுடன் பாடகி சுசித்ரா தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்திய அளவில் உள்ள மக்களுக்கும் சாத்தான்குளம் விவகாரம் தெரிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசியிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலானது. இதை வைத்தே பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் அணியினர் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். இதனிடையே, இந்த வீடியோவில் சுசித்ரா தெரிவித்த கருத்துகள் தவறானவை என்று சிபிசிஐடி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில் கூறியிருப்பதாவது:

"சமீபத்தில், தென்னிந்திய சினிமா பாடகி சுசித்ரா சாத்தான்குளம் சம்பவம் குறித்து விளக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. அந்தச் சம்பவம் குறித்து சுசித்ரா விவரிப்பது அடிப்படையற்றது. உண்மைக்குப் புறம்பானது. இந்த வீடியோவில் அவர் தவறாக மிகைப்படுத்துவது மட்டுமில்லாமல், சம்பவங்களின் தொடர்ச்சியைப் பரபரப்புக்கு உள்ளாக்குகிறார். அவரது குற்றச்சாட்டுகள் ஆதாரங்கள் ஏதுமின்றி கற்பனையாக உருவாக்கப்பட்டவையாகத் தெரிகிறது. அவரது குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டவை எதுவும் வழக்கின் விசாரணையில் கிடைத்தது போல் தெரியவில்லை. அந்த வீடியோ, போலீஸுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுகிறது. அவரது குற்றச்சாட்டுகள் பலவீனமாக இருந்ததால் அந்த வீடியோக்களை சுசித்ரா நீக்கிவிட்டார்."

இவ்வாறு சிபிசிஐடி தெரிவித்தது.

சிபிசிஐடி அறிக்கையைத் தொடர்ந்து 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த தனது வீடியோவை நீக்கிவிட்டார் சுசித்ரா.

அதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவில் சுசித்ரா கூறியிருப்பதாவது:

"அந்த வீடியோவை விடுங்கள். அதற்கான வேலை முடிந்துவிட்டது. இந்த வழக்கில் இப்போதிலிருந்து என்ன நடக்கிறது என்று பாருங்கள். அதுதான் முக்கியம். வீடியோவை அழிப்பது முக்கியமில்லை. நான் வீடியோவில் குறிப்பிட்ட எதுவும் நடக்கவில்லை என்று போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அவர்கள் என்னிடம் கூறினர். இதுதான் எனக்குக் கவலையளிப்பதாக உள்ளது. உண்மையான போஸ்ட் மார்ட்டம்தான் முக்கியம். ஊடகங்களே, உங்களுக்கு ஒரு நகல் கிடைக்கும்வரை ஓயாதீர்கள்".

இவ்வாறு சுசித்ரா தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழக போலீஸார் கேட்டுக் கொண்டதற்காக வீடியோவை நீக்கிய சுசித்ரா என்று செய்தி வெளியானது.

இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு, "திருத்தம்: சிபிசிஐடி அழைத்தார்கள். மக்களிடையே கலகத்தை ஏற்படுத்தும் நோக்கில் போலிச் செய்தி பரப்பியதற்காகக் கைது செய்ய நேரிடும் என்று எச்சரித்தார்கள். அதை அவர்கள் நிச்சயம் செய்வார்கள் என்று என்னுடைய வழக்கறிஞர் அறிவுறுத்தியதால் அந்த வீடியோவை நீக்கினேன். இந்த வழக்கைக் கவனியுங்கள் மக்களே - இதில் நிறைய கோளாறுகள் நடந்து கொண்டிருக்கின்றன" என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in