'டெடி' திரையரங்கில் மட்டுமே வெளியாகும்: படக்குழு தகவல்

'டெடி' திரையரங்கில் மட்டுமே வெளியாகும்: படக்குழு தகவல்
Updated on
1 min read

'டெடி' படம் திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

ஆர்யா நடிப்பில் சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் ‘டெடி’. திருமணத்துக்குப் பிறகு ஆர்யா - சயீஷா ஜோடியாக நடித்துள்ள முதல் படம் இது. இயக்குநர் மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் மகிழ் திருமேனி வில்லனாக நடித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால், படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனிடையே டீஸர் மற்றும் பாடல் வெளியிடப்பட்டு, கோடை விடுமுறை வெளியீட்டுக்கு 'டெடி' படம் தயாரானது.

ஆனால், கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் பரவியது. இது தொடர்பாக விசாரித்தபோது ஓடிடி தளங்களுக்கும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்கள்.

இதனிடையே படக்குழுவினர் தரப்பினரிடம் விசாரித்தபோது, " 'டெடி' படம் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்பில்லை. ஏனென்றால், படத்தின் வெளியீட்டு உரிமையை முன்பே விற்றுவிட்டோம். ஆகையால், நிலைமை சரியானதும் திரையரங்கில் வெளியாகும்" என்று தெரிவித்தார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in