

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்கான வெப் சீரிஸில் யாருடைய இயக்கத்தில் யாரெல்லாம் நடித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், கெளதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்துக்காக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளனர். அனைவரது கதைகளுமே 30 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வெப் சீரிஸில் யாருடைய இயக்கத்தில் எந்தெந்த நடிகர்கள் நடித்துள்ளனர் என்ற விவரம் இப்போது வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸ் முழுக்கவே ஆணவக் கொலையைப் பற்றியதாகும். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் பகுதியில் பிரகாஷ் ராஜ் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் பகுதியில் சாந்தனு, காளிதாஸ் மற்றும் பவானி ஸ்ரீ இணைந்து நடித்திருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு பழனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் பகுதியில் அஸ்வின் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு மதுரையைச் சுற்றியுள்ள பகுதியில் நடைபெற்றது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் பகுதியில் கல்கி கொச்சிலின் மற்றும் அஞ்சலி இணைந்து நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு சென்னையிலேயே அரங்குகள் அமைத்து நடந்தது. இதில் விக்னேஷ் சிவன் பகுதிக்கு அனிருத்தும், கெளதம் மேனன் பகுதிக்கு தர்புகா சிவாவும் இசையமைப்பாளர்களாகப் பணிபுரியவுள்ளனர்.
அனைவருமே இறுதிகட்டப் பணிகளை முடித்து தங்களுடைய பகுதிகளைக் கொடுத்துவிட்டார்கள். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.