

தெலுங்கு சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக முன்னணி இடம் வகிக்கும் இசையமைப்பாளர் மணிசர்மா இன்று (ஜூலை 11) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இவர் 30-க்கு மேற்பட்ட தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தமிழ், கன்னடம், இந்தி மொழிப் படங்களிலும் பணியாற்றியிருக்கிறார்
1992-ல் ராம்கோபால் வர்மா இயக்கிய 'ராத்ரி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் மணிசர்மா. அடுத்ததாக அவர் இயக்கிய 'அந்தம்' படத்துக்கும் இசையமைத்தார். இவ்விரு படங்களும் இந்தியிலும் வெளியாகின. 1990-கள் முழுவதும் நிறைய வெற்றிப் படங்களில் பணியாற்றி முன்னணி இடம் வகித்தார். புத்தாயிரத்திலும் அந்த வெற்றிப் பயணத்தை சீராகவும் சிறப்பாகவும் தொடர்ந்தார்.
2001-ல் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'நரசிம்மா' படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார் மணிசர்மா. அடுத்ததாக விஜய்-ரிச்சா பலோட் நடித்த 'ஷாஜகான்' படத்துக்கு இவர் இசையமைத்த அனைத்துப் பாடல்களும் வெற்றிபெற்றன. குறிப்பாக 'மெல்லிசையே', 'மின்னலைப் பிடித்து' ஆகிய பாடல்கள் விஜய்யின் திரை வாழ்வில் மிகச் சிறந்த மெலடிப் பாடல்களாக அமைந்தன. விஜய்யின் 'யூத்' படத்திலும் 'சர்க்கரை நிலவே', 'சந்தோஷம் சந்தோஷம்', 'ஆல்தோட்ட பூபதி' என இவர் இசையமைத்த பாடல்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.
'ஆசை ஆசையாய்', 'அரசு', 'அலாவுதீன்', 'ஆஞ்சநேயா', 'கம்பீரம்', 'மலைக்கோட்டை', 'ஆர்யா' என பல படங்களில் வெற்றிப் பாடல்களை வழங்கினார். 'மல்லிகை மல்லிகை பந்தலே' (அரசு), 'கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு' (திருப்பாச்சி) என இவர் இசையில் அமைந்த பல மெலடி பாடல்கள் இசை ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தன.
தொடர்ந்து தெலுங்குப் படங்களின் தமிழ்ப் பதிப்புகளுக்கும் நேரடித் தமிழ்ப் படங்களுக்கும் இசையமைத்தார். 'போக்கிரி' போன்ற படங்களில் தமிழ். தெலுங்கு இரண்டு மொழிகளுக்கும் இசையமைத்து வெற்றிப் பாடல்களைக் கொடுத்தார். 'குஷி' உட்பட தமிழில் வெற்றிபெற்று தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட படங்களுக்கும் இசையமைத்தார்.
தெலுங்கில் இப்போதும் தொடர்ந்து வெற்றிகரமான இசையமைப்பாளராக இயங்கிவரும் மணிசர்மா இந்த ஆண்டில் மட்டும் ஒன்பது படங்களில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி மிகப் பெரிய வெற்றிபெற்ற 'அசுரன்' படத்தின் மறு ஆக்கமான 'நாரப்பா' அவற்றில் ஒன்று. சிரஞ்சீவி, ராம்சரண், காஜல் அகர்வால் நடிக்கும் 'ஆச்சார்யா' படத்துக்கும் அவர் இசையமைத்து வருகிறார். தமிழில் 2016-ல் வெளியான 'நாரதா' படத்துக்குப் பின் அவர் எந்தப் படத்திலும் பணியாற்றவில்லை.
தெலுங்கிலும் தமிழிலும் பல மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்து ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் மணிசர்மா திரைத் துறையில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த இந்தப் பிறந்த நாளில் அவரை மனதார வாழ்த்துவோம்.