

தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் கே.பாலசந்தருக்கு ஜூலை 9ம் தேதி 90-வது பிறந்த நாள். ரஜினி, சரிதா, விவேக், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். 'நீர்க்குமிழி', 'சர்வர் சுந்தரம்', 'இரு கோடுகள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'தண்ணீர் தண்ணீர்' உள்ளிட்ட பல்வேறு சிறந்த படங்களை இயக்கி, புகழ் பெற்றவர். 9 தேசிய விருதுகள் வென்ற கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதா சாகேப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது.
உடல்நலக் குறைவால் 2014ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி கே.பாலசந்தர் காலமானார். இன்று கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், பிரபலமானவர்கள் ஆகியோர் கே.பி. பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார்கள்.
இதன் வீடியோ பதிவுகள் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.
இதில் பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது :
பாலசந்தர் சாருடைய 90வது பிறந்தநாள். அவர் இருந்திருந்தால், ஒரு பெரிய மலர்க்கொத்தோடு அவரைத் தேடிப் போய், அவரின் பாதம் பணிந்து, அவரிடம் ஆசி வாங்கி, அவருக்கு வாழ்த்துச் சொல்லியிருக்க வேண்டிய நாள். காலம் நம்மிடமிருந்து அவரைப் பிரித்துவிட்டது. ஆனால் மனதில் அவருக்கான இடம் அப்படியேதானே இருக்கும். அந்த இடத்தை எப்படி காலத்தால் பறித்துச் செல்லமுடியும்?
கே.பி.சாரின் நினைவுகள், எங்களுக்கு ரொம்பவே பிரத்தியேகமானது. என்னுடைய அம்மா, சித்தி எல்லாருமே ஏ.ஜி.எஸ். அலுவலகத்தில் வேலை பார்த்தவர்கள். அவருடைய ஆரம்ப கால நாடகங்களில், ’மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்தை ஆங்கிலத்தில் அரங்கேற்றிய போது, முதல் வரிசையில் அமர்ந்து, புதிய நாடகத்தை, சுடச்சுட பார்த்த அனுபவத்தை, அம்மாவும் சித்தியும் என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
அவருடைய மேதைமையையும் நாடக வசனங்களில், அது ஆங்கிலமோ தமிழோ எதுவாக இருந்தாலும் அதில் இருக்கும் ஷார்ப்னெஸ்ஸைப் பற்றி, சொல்லிக்கொண்டே இருப்பார்கள். மொழ்யின் மீது அவருக்கு இருந்த ஆழமான பற்று, மதிப்பு, வழிபாட்டு உணர்வு இவைதான் அவரது படைப்பூக்கத்துடைய வேர் என்பதாக நான் நினைப்பேன்.
அந்த அளவுக்கு மொழியில் ஆளுமை இல்லையெனில் இப்படி வசனங்களை எழுதியிருக்கமுடியாது. எத்தனை வசனங்கள்...
‘இரு கோடுகள்’ படத்தில், செளகார் ஜானகி, எப்போது பார்த்தாலும் ‘டீக்கே’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவர் வடநாட்டில் இருந்து வேலை பார்த்துவிட்டு வந்திருப்பார். அவருக்கும் தன்னுடைய கணவரான ஜெமினிகணேசனுக்கும் தொடர்பு உண்டு போல என்று ஜெயந்தி சந்தேகப்பட்டு, பாத்திரங்களையெல்லாம் போட்டு உருட்டுவாங்க. பசங்களைப் போட்டு அடிப்பாங்க. ’ஜெயா, உன் மனசுல என்னதான் இருக்கு. சுருக்கமா சொல்லு, ஒரே வார்த்தைல சொல்லு, தெளிவா சொல்லு’ என்று ஜெமினி கேட்பார். அதற்கு ஜெயந்தி பதில் சொல்லுவாங்க... ‘டீக்கே’ என்று! மறக்கமுடியாத காட்சி.
வசனங்களில் நகைச்சுவைதான் இருக்கும். ஆனால் அதற்குள்ளே சமூகத்தின் அவலமும் இருக்கும். ‘ஒரு வீடு இரு வாசல்’ படம்... அவருடைய படங்களிலேயே எனக்கு ரொம்பப் பிடித்த படம். அதில், சென்னையைச் சேர்ந்த விவேக், கதை எழுதுவதற்காக கதாசிரியருடன் சேர்ந்து குற்றாலத்துக்குச் செல்வார். அப்போது, அந்த கதாசிரியர், ‘நானும் அஞ்சாறு நாளா பாத்துக்கிட்டிருக்கேன். குற்றாலத்துக்கு வந்து ஒருதடவை கூட நீ அருவில குளிக்கலையே?’ என்று கேட்பார். அதற்கு விவேக், ’நான் சுத்தமான மெட்ராஸ்காரன். நல்ல தண்ணில குளிச்சா, எனக்கு ஜூரம் வந்துரும்’ என்று சொல்லுவார். இது படீர்னு சிரிக்கவைக்கிற நகைச்சுவை. ஆனால் இதற்குள்ளே இருக்கிற சமூக அவலத்தை எவ்வளவு தெளிவாகச் சொல்லியிருக்கிறார் பாலசந்தர் சார்.
சமூகம் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாக, படைப்பாளி என்பவர் ஒரு அடி முன்னதாக எடுத்துவைப்பார். அந்த வகையில் ‘அவர்கள்’ படம் எனக்கு மிகவும் பிடித்தபடம். அநேகமாக தமிழ் சினிமாவில் அம்மாக்கள் எப்படி இருப்பார்கள்? க்ளைமாக்ஸில், அவரை ஒரு தூணில் கட்டிவைத்திருப்பார்கள். ’ஓ’ என்று அழுவார்கள். ‘அத்தான் அத்தான்’ என்று கத்துவார்கள். யாராவது வந்து நம்மைக் காப்பாற்ற மாட்டார்களா என்று ஏங்குவார்கள். இப்படி இல்லையென்றால், படத்தில் அம்மா தியாகத்தின் திருவுருவமாக இருப்பார்கள். முதல் காட்சியில் முந்தானையைக் கையில் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினால், கடைசிக் காட்சி வரை அழுதுகொண்டே இருப்பார்கள். இப்படி அழுதுகொண்டே இருக்கிற பெண்களுக்கு மத்தியில்தான், ’அவர்கள்’ படத்தில் ‘அனு’வைப் படைத்தார் பாலசந்தர் சார்.
‘அனு’ அழவே மாட்டாள். அதுதான் படத்தின் ஒன்லைனர். அழவே மாட்டாள். கடைசி காட்சியில், அன்பைக் கண்டு அழுவாளே தவிர, வேறு எதற்காகவும் அழவே மாட்டாள். அப்படிப்பட்ட வீரமான, துணிச்சலான, சமூகத்தில் முதல் அடியை எடுத்துவைக்கிற பெண்களை கடைசி வரை தன் படங்களில் காட்டினார்.
’சிந்து பைரவி’ படத்தில் பிரசித்தி பெற்ற கடைசி சீன். எல்லோருமே சொல்லிவிடுவார்கள்...’ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன’ என்பது சமூகத்தில் இருக்கிற மனநிலை. ஆனால் ‘சிந்து’ கேரக்டர், ‘ஜேகேபி மாதிரி ஒருத்தர், ரெண்டாவதா ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா, இதுதான் சாக்குன்னு காத்துக்கிட்டிருக்கிற ஆம்பளப் பசங்க, ’பாரு ஜேகேபி செஞ்சிக்கிட்டாரே...நான் ஏன் செஞ்சிக்கக் கூடாது’ என்று ஜேகேபியை உதாரணமாக்கிச் சொல்றதுக்கு, நான் காரணமாயிடலாமா?’ என்று சிந்து கேட்கிற அந்தக் கேள்வி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
காவேரி மருத்துவமனையில், முதியோர் நல வார்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. பாலச்சந்தர் சார்தான் திறந்துவைத்தார். அந்த நிகழ்ச்சியில், அவருக்குப் பக்கத்தில் இருக்கிற அபாரமான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நானும் என் கணவரும் கே.பி.சாரின் அப்படிப்பட்ட விசிறிகள். எனக்காவது அப்படி இப்படி என மறந்துபோகும். ஆனால் என் கணவர் மறக்காமல் சொல்லுவார்.
அந்த நிகழ்ச்சியில் பேசும் போது பாலசந்தர் சார், ‘எப்போதுமே இளமையைத்தான் கொண்டாடுகிறோம். நானே கூட முதுமையைக் கொண்டாடுவது போல காட்சிகளோ பாடல்களோ அமைத்தது போல் தெரியவில்லை’ என்று பேசினார். உடனே என் கணவர் பாஸ்கருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி, ‘அப்படியா? முதுமையைப் பற்றி வரவே இல்லையா?’ என்று கேட்டேன். உடனே அவர் ‘’வெள்ளிவிழா’ படத்தில், உனக்கென்ன குறைச்சல்... வந்தால் வரட்டும் முதுமை’ என்ற பாடல் அவர் படத்தில்தானே வந்தது’ என்று தகவல் அனுப்பினார்.
பிறகு பேசும்போது நான் சொன்னேன். ‘எனக்கே என் படம் மறந்துவிட்டது. ஆனால் பாரதி பாஸ்கர் நினைவு வைச்சிருக்காங்களே’ என்று பாலசந்தர் சார் சொன்னார்.
நான் மட்டுமில்லை, லட்சக்கணக்கான ரசிகர்கள் உங்களுடைய படங்கள் மொத்தத்தையும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நினைவாஞ்சலி. ஒருவிதத்தில் வருத்தம், இன்னொரு விதத்தில் கொண்டாட்டம். இப்படிப்பட்ட மாபெரும் படைப்பாளி, தமிழ்த்திரையுலகிற்குக் கிடைத்தது பாக்கியம். உங்களிடம் நாங்கள் என்றென்றைக்கும் நாங்கள் நன்றியோடு இருப்போம்.
பாலசந்தர் சார்.. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் எங்கே இருந்தாலும் நீங்கள் உருவாக்கி வைத்துவிட்டுப் போன பாதையை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருப்பீர்கள். அதில் பயணம் செய்கிற நாங்கள் எல்லோரும் உங்களின் ஆசியை என்றென்றைக்கும் நாடுகிறோம்.
இவ்வாறு பாரதி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.