

பொருளாதார நெருக்கடியைச் சரிசெய்ய தயாரிப்பாளர்கள் நடத்திய ஆலோசனையைச் சாடியுள்ளார் எஸ்.வி.சேகர்.
கரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு, இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் பட வெளியீடு என்று எதுவுமே நடைபெறவில்லை. இதனால் தயாரிப்பாளர்களுக்குக் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்க முன்னணித் தயாரிப்பாளர்கள் பலர் ஒன்றிணைந்து ஜூம் செயலி வழியே ஆலோசனை நடத்தினார்கள்.
அதில் நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே 50% வரை சம்பளத்தைக் குறைக்கலாம் என்று பேசி முடிவு செய்துள்ளனர். ஆனால், இது தொடர்பாக இதர சங்கங்களுடன் பேசிய பின்புதான் இறுதி முடிவு எடுக்கப்படும்.
இதனிடையே, இந்தத் தயாரிப்பாளர்கள் ஆலோசனை சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இன்னும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலே நடைபெறவில்லை. அதற்குள் ஒரு சிலர் எடுத்த முடிவு எப்படி சங்கத்தின் முடிவாகும் என்று சில தயாரிப்பாளர்கள் குரலெழுப்பி வருகிறார்கள்.
தயாரிப்பாளர்களின் ஆலோசனையை எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பதிவில் சாடியுள்ளார்.
"தயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சங்கமும் முடங்கியுள்ள வேளையில் சில பட அதிபர்களின் ஆலோசனை. இது விளம்பரத்துக்குப் பயனாகும். செயலுக்கு வர வாய்ப்பில்லை. சங்கத் தேர்தலில் நிற்கும் ஒரு அணியின் விளம்பர நடவடிக்கையே" என்று தெரிவித்துள்ளார் எஸ்.வி.சேகர்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் களமிறங்கும் அணிக்கு எஸ்.வி.சேகர் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது