

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கல்வி நிறுவனங்களைச் சாடியுள்ளார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.
கரோனா ஊரடங்கினால் எந்தவொரு கல்வி நிறுவனங்களுமே இயங்கவில்லை. 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருமே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். மேலும், இந்த ஆண்டு 10-ம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கு இப்போதிலிருந்தே ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிவிட்டன.
இது தொடர்பாக பல்வேறு கேள்விகள், விவாதங்களைத் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் காண முடிகிறது. மேலும் கரோனா அச்சுறுத்தல் முடியும்வரை ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடங்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
இதனிடையே ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாகத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"ஒரு 10-ம் வகுப்பு மாணவர் காலை 8.30 முதல் மாலை 8.30 வரை வகுப்பில் இருக்கிறார். அதன் பிறகு 1 மணி நேரம் டியூஷன். கணினியின் முன்னால் மாணவர்களை நீண்ட நேரம் அமர வைக்காமல் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் புதிய வழிகளை பள்ளிகள் கண்டறிய வேண்டும். வகுப்பறையில் இருக்கும் நேரம் போலவே ஆன்லைன் வகுப்புக்கு நேரம் ஒதுக்குவது ஒரு கல்வி நிறுவனத்துக்கு மிகவும் முட்டாள்தனமானது"
இவ்வாறு எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.