

1940-களின் சென்னை நகரை 2010-ல் வாழ்பவர்கள் காண முடியுமா? சினிமாவில்தான் முடியும் என்று எளிதாக சொல்லிவிடலாம். ஆனால் 60-70 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பெரு நகரத்தை அதன் புறவடிவம். சமூகச் சூழல், பண்பாட்டுப் பின்னணி ஆகியவற்றுடன் திரையில் பதிவு செய்வது அவ்வளவு எளிய காரியமல்ல. தமிழில் அதை நிகழ்த்திக் காட்டி உண்மையிலேயே 1940இல் சென்னை எப்படி இருந்திருக்கும் என்ற குறுக்கு வெட்டுத் தோற்றத்தைக் கொடுத்த சாதனையை நிகழ்த்திய 'மதராசபட்டினம்' திரைப்படம் வெளியாகி இன்றோடு (ஜூலை 9) 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அந்தக் காலக்கட்டத்தில் நகரத்தைக் குறிக்க பட்டினம் என்ற சொல்லும் சென்னைக்கு மதராஸ் என்ற பெயரும்தான் புழக்கத்தில் இருந்தன. அதனால்தான் இந்தப் படத்துக்கு 'மதராசபட்டினம்' என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.
விஜய்யின் முதல் கதை
பிரியதர்ஷனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் இயக்கிய முதல் இரண்டு படங்கள் ('கிரீடம்', 'பொய் சொல்லப் போறோம்') ரீமேக் படங்கள். அவர் கதை எழுதி இயக்கிய முதல் படம் 'மதராசபட்டினம்'. அந்த வகையில் முதல் நேரடிக் கதையை 1940-களின் வரலாற்றுக் காலகட்டத்தைச் சித்தரிக்கும் பீரியட் படமாகக் கற்பனை செய்தார். அந்தக் கற்பனைக்கு கலைவடிவம் கொடுப்பதில் வெற்றிபெற்றார்.
1940-களில் வாழ்ந்த உணர்வு
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த மதராஸ் நகரத்தில் துணி துவைத்துக்கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு பெரும் கூட்டம் வாழ்ந்துகொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த தொழிலாளிக்கும் மதராஸ் மாகாணத்துக்கான பிரிட்டிஷ் ஆளுநரின் மகளுக்கும் இடையில் அரும்பும் காதல் கதைதான் 'மதராசபட்டினம்'. ஆனால், அந்தக் காதலினூடே அந்தக் காலகட்டத்தில் நிலவிய பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம். வெள்ளைக்கார அதிகாரிகளின் கொடுங்கோன்மை. எளிய மக்கள் அதை துணிவுடனும் வீரத்துடனும் எதிர்கொண்ட விதம், சுதந்திரப் போராட்ட உணர்வு என அனைத்தையும் கச்சிதமாகப் பதிவு செய்திருந்தார் இயக்குநர் விஜய்.
பிரிட்டிஷ் அரசு, அலுவலகங்கள், அரண்மனைகள் போன்ற வீடுகள், காவல் விசாரணைக் கூடங்கள், துணி துவைக்கும் தொழில் நடைபெறும் பகுதி, அங்கு வாழும் உழைக்கும் மக்களின் கொண்டாட்டம், கனிவு, கவலைகள், சாலைகளில் ட்ராம் வண்டி பயணம், கூவம் ஆற்றில் படகுப் பயணம் என 1940களின் சென்னையை கண்முன் நிறுத்தினார் விஜய்.
கலை இயக்குநர் செல்வகுமார், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருடைய பங்களிப்பும் அற்புதமாக அமைந்திருந்தது. இதனால் வெள்ளித்திரையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் 1940களின் சென்னைக்குச் சென்று வாழ்ந்துவிட்டு வந்த உணர்வைப் பெற்றார்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த 1947 ஆகஸ்ட் 15 அன்று சென்னை எப்படி இருந்தது என்பதை ரசிகர்கள் உணரும் வகையில் கதையின் போக்கில் அன்றைய நிகழ்வுகளைக் காண்பித்தது படத்தை மேலும் சிறப்பாக்கியது. ரசிகர்கள் என்றைக்கும் மறக்க முடியாத உணர்வெழுச்சியைத் தந்தது. .
இதற்கு முன்பே பல படங்கள் பிரிட்டிஷ் இந்தியாவையும் சுதந்திரப் போராட்டத்தையும் காட்சிப்படுத்தியிருந்தாலும் இந்தப் படம் கூடுதலாக உண்மைக்கு நெருக்கமாகவும் உயிரோட்டத்துடனும் இருந்தது. இந்தக் காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி இதற்கு முக்கியமான காரணம் என்றாலும் இதில் பணியாற்றிய கலைஞர்களின் கற்பனை வளத்துக்கும் வரலாற்று ஆய்வுக்கும் கடின உழைப்புக்கும் இணையான பங்கிருப்பதை மறுத்துவிட முடியாது.
காதலும் வீரமும்
இப்படிப்பட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வைத் தந்ததோடு மனதை உருக்கும் காதல் காட்சிகள், சென்டிமென்ட், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் என அனைத்தும் சிறப்பாக அமைந்த முழுமையான வெகுஜனப் படமாகவும் 'மதராசப்பட்டினம்' அமைந்திருந்தது. வீரம், காதல், கனிவு ஆகியவற்றின் கலவையாக நாயகனைப் படைத்திருந்ததும் அவை அனைத்தையும் ரசிகர்களை உள்வாங்க வைக்கும் காட்சிகளை அழகாகப் படைத்திருந்ததும் படத்தை ரசிகர்களுக்கு மேலும் நெருக்கமாக்கின.
வியக்கவைத்த இசைத்திறன்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் பாடல்களும் பின்னணி இசையும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக 'பூக்கள் பூக்கும் தருணம்' என்ற காதல் பாடல் தமிழ் சினிமா வரலாற்றில் சாகாவரம் பெற்ற தலைசிறந்த மெலடி டூயட் பாடல்களில் ஒன்று. ஜி.வி.பிரகாஷின் திரைவாழ்வில் அவருடைய இசைத் திறமையைப் பெரிதும் வியக்க வைத்த படங்களில் ஒன்று 'மதராசபட்டினம்'.
நடிகர்கள் பங்களித்த நம்பகத்தன்மை
படத்தின் நாயகனான ஆர்யா அந்தக் காலகட்டத்தின் துணிவும் கனிவும் நிறைந்த இளம் தொழிலாளியை கண்முன் நிறுத்தினார். அவருடைய நடிப்புத் திறன் மிகச் சிறப்பாக வெளிப்பட்ட படம் இதுதான். இந்தப் படத்தில் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு வரும் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரிட்டிஷ் நடிகை ஏமி ஜாக்சன் கதாபாத்திரத்துக்கு மிகப் பொருத்தமான தேர்வாக அமைந்தார். அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தார். அதன் பிறகு பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்களின் படங்களில் நடித்துவிட்டார். நாசர், வி.எம்.சி.ஹனீபா, பாலாசிங், எம்.எஸ்.பாஸ்கர். ஜார்ஜ் சதீஷ் என துணை நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். அனைவருமே அந்தக் காலகட்டத்து மனிதர்கள் என்ற நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் நடித்திருந்தார்கள்.
இப்படியாக பல காரணங்களுக்காக மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்துவிட்டது 'மதராசபட்டினம்'.