

தயாரிப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தனது ட்விட்டர் பதிவில் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
கரோனா ஊரடங்கினால் திரையரங்குகள் அனைத்துமே மூடப்பட்டதால், புதிய திரைப்படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. மேலும், 100 நாட்களுக்கு மேல் படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை. இதனால், தயாரிப்பாளர்களுக்குக் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பொருளாதார இழப்பை எப்படிச் சரிசெய்யலாம் என்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூலை 8) நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட முன்னணித் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தங்களுக்குள் இருக்கும் மனக்கசப்புகள் அனைத்தையும் மறந்து தயாரிப்பாளர்கள் பேசியுள்ளனர்.
அந்தப் பேச்சுவார்த்தையில், நடிகர்களின் சம்பளத்தை 50% வரை குறைக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளனர். இது தகவலாக வெளியாகி பல்வேறு விவாதங்களை தமிழ்த் திரையுலகில் உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே தனது ட்விட்டர் பதிவில், பல்வேறு நடிகர்கள் தன்னிடம் 50% சம்பளத்தைக் குறைக்கப் பேசினார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே தயாரிப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"கரோனாவுக்குப் பிந்தைய நிலை குறித்து நான் உட்பட சில தயாரிப்பாளர்கள் ஆலோசித்தோம். பல்வேறு சங்கங்களுடன் ஆலோசித்து சம்பளம் உள்ளிட்ட தயாரிப்புச் செலவுகள் குறித்து ஒரு சுமுகத் தீர்வை எட்ட முடிவு செய்துள்ளோம். அதைத் தாண்டி வேறு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை".
இவ்வாறு எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.