

அஜித் மற்றும் இயக்குநர் சிவா இணைந்து உருவாகி வரும் படத்துக்கு 'வேதாளம்' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் சிவா. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அப்படப்பிடிப்பு முடிந்தவுடன், அக்டோபர் முதல் வாரத்தில் ஒரு பாடலைப் படமாக்க வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. இன்னும் பெயரிடப்படாத இப்படத்துக்கு 'தல 56' என்று பணியாற்றும் தலைப்பாக வைத்திருந்தார்கள்.
விநாயகர் சதுர்த்தி அன்று படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் படக்குழு எதுவுமே தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், "செப்.23ம் தேதி இரவு 12 மணிக்கு படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும்" என்று அஜித் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்தார்கள்.
இறுதியாக படத்தின் பெயர் 'வேதாளம்' என்று அறிவித்து, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இணையத்தில் வெளியிடப்பட்டது. 'சரவெடி', 'ஆரவாரம்', 'வரம்', 'வேதாளம்' மற்றும் 'அடங்காதவன்' உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. இறுதியாக அஜித் 'வேதாளம்' என்று பெயர் நன்றாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து படக்குழு 'வேதாளம்' என்ற பெயரை இறுதி செய்தது என்கிறது அஜித் நெருங்கிய வட்டாரங்கள்.