நடிகர்களின் சம்பளம் 50% வரை குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு

நடிகர்களின் சம்பளம் 50% வரை குறைப்பு: தயாரிப்பாளர்கள் முடிவு
Updated on
1 min read

நடிகர்களின் சம்பளத்தை 50% வரை குறைக்கப் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

100 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் கரோனா ஊரடங்கு நீடித்து வருகிறது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இறுதிகட்டப் பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் நாளை (ஜூலை 8) முதல் தொடங்கவுள்ளன.

திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் புதிய படங்களும் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் கடும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூலை 6) மாலை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 7) மாலை தயாரிப்பாளர்கள் மட்டும் கலந்துகொண்ட இணைய வழி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, கலைப்புலி தாணு, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெவ்வேறு அணியில் போட்டியிட்டாலும் இதில் ஒற்றுமையாக அனைவரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

கரோனா ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை எப்படிச் சரி செய்யலாம் என்று இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது நடிகர்கள், நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருடைய சம்பளத்திலும் 50% வரை குறைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

சம்பளம் அதிகம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் அதிகப்படியான சதவீதத்தையும், குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்களின் சம்பளத்தில் குறைவான சதவீதத்தையும் குறைக்கலாம் எனவும் ஆலோசனையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பளக் குறைப்புப் பேச்சுவார்த்தை தொடர்பாக நடிகர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம் என அனைத்துச் சங்கங்களிலும் பேசி முடிவெடுக்கலாம் என்று ஒருமனதாக கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக, இதர சங்கங்களுடன் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in