

சிவகார்த்திகேயனின் பேச்சுக்கு திருநெல்வேலி மாநகரக் காவல் துணை ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். அதற்கு சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.
தனது படங்களின் இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்பு ஆகியவற்றில் சிவகார்த்திகேயனின் பேச்சு மிகவும் பிரபலம். அதேபோல் கல்லூரி மாணவர்களிடையே அவர் ஆற்றிய உரைகளும் அவ்வப்போது இணையத்தில் ட்ரெண்டாகும். அப்படி அவர் பேசிய பேச்சு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
"2 விஷயத்தைத் தாண்டி இப்போது வரை வேறு எதற்கும் நான் பெருமைப்பட்டதில்லை. இன்றைக்கு வரைக்கு சிகரெட் பிடித்தது கிடையாது. சரக்கு அடித்தது கிடையாது. அதற்குக் காரணம் என் நண்பர்கள் என்றுதான் சொல்வேன். என் நண்பர்கள் வாடா மச்சான் அங்கு போகலாம் என்று கூப்பிட்டதே கிடையாது. உங்க அப்பா - அம்மா சம்பாதித்த பணத்தை வைத்து, உங்களுடைய உடம்பை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த அட்வைஸ் கசக்கும்" என்று கல்லூரி விழா ஒன்றில் பேசியிருந்தார் சிவகார்த்திகேயன்.
இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் பதிவை மேற்கொளிட்டு திருநெல்வேலி மாநகரக் காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன், "நட்சத்திரங்கள் சொல்வதை அப்படியே கேட்பவர்கள் என்றால் இதனையும் கொஞ்சம் கேளுங்கள். குடிக்க, புகைக்க எந்த நண்பனும் அழைக்க மாட்டான், அப்படி அழைப்பவர் நட்பிலிருந்து வெளியேறுங்கள். அவன் உங்களை உலகிலிருந்து வெளியேற அழைக்கிறான். நன்றி சிவகார்த்திகேயன்" என்று தெரிவித்தார்.
இதற்கு சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து "இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் உங்களின் உணர்வுபூர்வமான வழிகாட்டுதல்கள் தொடரட்டும். அன்பும் நன்றியும் சிவகார்த்திகேயன். அன்பை விதைப்போம்" என்று பதிலளித்தார் காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன்.
அதற்கு சிவகார்த்திகேயன் "உங்கள் அன்பும் வாழ்த்தும் ஊக்கப்படுத்துகிறது சார்.. நன்றி. அன்பை விதைப்போம்" என்று தெரிவித்துள்ளார்.