

'96' படம் இந்த அளவுக்கு வெற்றி பெறும் என எதிர்பார்க்கவில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘96’. ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார்.
பள்ளிக்காலக் காதலைப் பற்றிய இந்தப் படம், காதலர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. எனவே, இந்தப் படம் தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்தக் கரோனா ஊரடங்கில் அளித்த நேரலைப் பேட்டியில் '96' படத்தில் நடித்த அனுபவம் மற்றும் வெற்றி குறித்துப் பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"23 வயது வரைக்கு நானும் ராம்தான். ஆண்கள் - பெண்கள் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரியில்தான் படித்தேன். யாரிடமும் பெரிதாகப் பேசமாட்டேன். ஏனென்றால், கூச்ச சுபாவம் உள்ளவன். ஆகையால், எனக்குள் ஒரு ராம் இருந்தார். அதைத் தொட்டதால்தான் அந்தப் படத்தில் நடிக்க முடிந்தது.
அதே போல் '96' படத்தில் நானும் த்ரிஷாவும் ஹோட்டலில் பேசும்போது, நான் உன் கல்யாணத்துக்கு வந்தேன் ஜானு என்று சொல்லும் காட்சியோடு படம் முடிந்துவிட்டது. அப்புறம் காலையில் ப்ளைட் பிடித்து ஊருக்குப் போய்விடுவார் த்ரிஷா. அவ்வளவுதான் வேறு எதுவுமே படத்தில் கிடையாது. ஆனால், படத்தோட ஃபீல் லட்டு மாதிரி இருக்கும்.
'96' படம் இந்த அளவுக்கு வெற்றிபெறும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. சுமாராகப் போகும் என்றுதான் நினைத்தேன். மேலோட்டமாகப் பார்த்தால் அந்தப் படம் பிடிக்காது. அந்தக் கதைக்குள் சென்று உணர வேண்டும். பிரேம் குமார் கதையைச் சொன்னவுடனே 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கதை வந்திருந்தால் சொதப்பியிருப்பேன். இப்போதுதான் சரியாகப் பண்ண முடியும் என நினைக்கிறேன் என்று சொன்னேன். இப்போது அந்தப் படம் பார்த்தால் கூட கொஞ்சம் சொதப்பி இருக்கிறேனோ என்று தோன்றும்".
இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.