

கெளதம் மேனன் இயக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் ஒன்றைப் பாட இருக்கிறார் சிம்பு.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'அச்சம் என்பது மடமையடா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை தனது 'போட்டோன் கதாஸ்' நிறுவனம் மூலம் கெளதம் மேனன் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு இன்று (செப்.15) முதல் துவங்க இருக்கிறது. தொடர்ச்சியாக 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். படத்தில் மொத்தம் 6 பாடல்கள். இதற்காக 4 பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்து, படக்குழுவும் படமாக்கிவிட்டது.
தற்போது 5வது பாடலைக் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இப்பாடலுக்கு இசையை முடிவு செய்து, வேறு ஒருவரைப் பாட வைத்து படப்பிடிப்புக்காக கொடுத்திருக்கிறார் ரஹ்மான். விரைவில் நடைபெறவிருக்கும் பாடல் பதிவில் அப்பாடலைப் பாடவிருக்கிறார் சிம்பு.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிம்பு பாடவிருக்கும் இரண்டாவது பாடல் இதுவாகும். ஏற்கனவே 'காதல் வைரஸ்' படத்தில் "பாய்லா மோர்" பாடலை பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்தவுடன், படத்தைப் பார்த்துவிட்டு 6-வது பாடலுக்கு இசையமைக்க முடிவு செய்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.