

கதிரின் தந்தை லோகு 'மாஸ்டர்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகவுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் லலித் கைப்பற்றியுள்ளார். இதன் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது.
கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்து நிலைமை சீரானவுடன், தீபாவளிக்கு வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ரம்யா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர்.
இவர்களுடன் நடிகர் கதிரின் தந்தை லோகுவும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது தொடர்பாக கதிர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்த இருவரின் பயணமும் எப்போதும் ஒரு ஊக்கமாக இருந்துள்ளது. அவர்களது ஆர்வமும், கனவும்தான் இன்று நான் நானாக இருப்பதற்கான காரணம். (அவர்களை நான் அப்பா, அம்மா என்று அழைக்கிறேன்) 53 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் 'மாஸ்டர்' மூலம் அவர் நடிப்பதற்கான கனவு நனவாகியுள்ளது.
அது மிகவும் சிறிய காட்சியாக இருந்தாலும், அவருடைய வாழ்நாள் கனவு நிறைவேறியுள்ளது. பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா. இது மகிழ்ச்சிக்கான நேரம், உங்கள் கனவுகளை நனவாக்குங்கள்".
இவ்வாறு கதிர் தெரிவித்துள்ளார்.