

பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை என்ற சட்டம் இயற்றும்படி தமிழக முதல்வருக்கு வரலட்சுமி சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட கோர சம்பவம் நடந்துள்ளது. ஜூன் 30-ம் தேதி முதல், 7 வயதுச் சிறுமியைக் காணவில்லை என்று ஏம்பல் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
போலீஸார் சிறுமியைத் தேடி வந்த நிலையில் தம்மம் குளத்திற்குத் தண்ணீர் செல்லும் வழியில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. போலீஸ் விசாரணையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைப் பலரும் கண்டித்து வருகின்றனர்.
சிறுமியின் மரணம் தொடர்பாக, நீதி கேட்கும் கோரிக்கை இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் நேற்று (ஜூலை 2) தனது ட்விட்டர் பதிவில் "என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? இன்னொரு குழந்தை கொடூரமாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது.
இதுதான் நாம் வாழும் உலகமென்றால் நம் அனைவருக்கும் கோவிட் வந்து இறக்க, நாம் உரியவர்களே. ஒரு வேளை இதுதான் மனிதர்களாகிய நமக்குக் கடவுளின் பதில் என நினைக்கிறேன். நாம் வாழத் தகுதியற்றவர்கள்" என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 3) காலை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"7 வயதுச் சிறுமியை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். நமது நீதி இதற்கு என்ன செய்கிறது. கைது செய்கிறார்கள், பின்பு எதுவுமே நடப்பதில்லை. ஆகையால், பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை என்ற சட்டத்தை தமிழக முதல்வர் கொண்டுவர வேண்டும். அந்தப் பயம் இருந்தால் மட்டுமே இவர்கள் எல்லாம் நிறுத்துவார்கள்.
இப்போதைக்குக் கைது செய்யப்பட்டு, பின்பு ஜெயிலிலிருந்து வெளியே வந்துவிடுவார்கள். திரும்பவும் அதே தவறைச் செய்கிறார்கள். ஆகையால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகள் மற்றும் பெண்கள் சார்பாகவும் இதைக் கேட்டுக் கொள்கிறேன். முதல் முறை பாலியல் வன்கொடுமை செய்தாலே மரண தண்டனை வேண்டும். அதேபோல் பாலியல் வன்கொடுமை என்றாலே மரண தண்டனை என்ற நிலை வர வேண்டும்
தமிழக முதல்வரே, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அனைத்துக் குழந்தைகள், பெண்களின் சார்பாக, தயவுசெய்து உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். உத்தரவைப் பிறப்பியுங்கள். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையைச் சகிக்காத முதல் மாநிலமாக உதாரணமாக இருங்கள். வேண்டிக் கேட்கிறேன்".
இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.