45 லட்ச ரூபாய் கையாடல்: பெண் கணக்காளர் மீது விஷால் மேலாளர் புகார்

45 லட்ச ரூபாய் கையாடல்: பெண் கணக்காளர் மீது விஷால் மேலாளர் புகார்
Updated on
1 min read

45 லட்ச ரூபாய் கையாடல் செய்துவிட்டதாக பெண் கணக்காளர் மீது விஷால் மேலாளர் புகார் அளித்துள்ளார்.

விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார் விஷால். இதில் பல படங்களைத் தயாரித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள 'சக்ரா' படத்தையும் இந்த நிறுவனமே தயாரித்துள்ளது.

இதனிடையே, இந்த நிறுவனத்தின் மேலாளராக ஹரிகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ரம்யா என்பவர் மீது பணம் கையாடல் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், 2015-ம் ஆண்டு முதல் விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தில் ரம்யா என்பவர் கணக்காளராகப் பணிபுரிந்து வருவதாகவும், விஷால் பிலிம் ஃபேக்டரி சார்பில் சில ஆண்டுகளாக வருமான வரித்துறைக்குச் செலுத்தச் வேண்டிய TDS தொகையை அவர் செலுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் TDS தொகையினை தனது கணக்கிலும், கணவர், உறவினர் கணக்கிலும் பணத்தைப் பரிமாற்றம் செய்து ரம்யா மோசடி செய்துள்ளதாகவும் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விஷால் தயாரிப்பு நிறுவனத்திடம் TDS தொகையினைக் கட்டிவிட்டதாக போலி ஆவணங்களையும், வங்கி விவரங்களையும் காட்டி மோசடி செய்துவிட்டதாகவும் அந்தப் புகார் மனுவில் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அலுவலக இ-மெயில் முகவரி மற்றும் அலுவலக கணிப்பொறியில் உள்ள முக்கியமான ஃபைல்களை அழித்துவிட்டதாகவும், தினசரி வரவு-செலவுக் கணக்குகளிலும் ரம்யா முறைகேடு செய்துள்ளதாகவும் ஹரிகிருஷ்ணன் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு ரம்யா மோசடி செய்த தொகை சுமார் 45 லட்ச ரூபாய் இருக்கும் எனவும், அதையும் தாண்டி மோசடி செய்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ரம்யாவிடம் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவிப்பதாகவும், ஜூன் 28-ம் தேதி அனைத்துக் கணக்கு வழக்குகளையும் ஒப்படைப்பதாகக் கூறிவிட்டு தலைமறைவாகிவிட்டதாகவும் விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in