ஏ.ஆர்.ரஹ்மான் இளைஞர்களுக்கு பெரிய ஆதரவு தருபவர்: 'தும்பி துள்ளல்' பாடகர் நகுல் அப்யங்கர்

ஏ.ஆர்.ரஹ்மான் இளைஞர்களுக்கு பெரிய ஆதரவு தருபவர்: 'தும்பி துள்ளல்' பாடகர் நகுல் அப்யங்கர்
Updated on
1 min read

விக்ரம் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 'கோப்ரா' திரைப்படத்தின் 'தும்பி துள்ளல்' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடலைப் பாடிய இளம் பாடகர் நகுல் அப்யங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிப் பேசியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த நகுல், ஏற்கெனவே ரஹ்மானுடன் சர்கார், 'செக்கச்சிவந்த வானம்' படத்தின் தெலுங்கு பதிப்புகளில் பணியாற்றியுள்ளார். இவர் சமீபத்தில் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியின் தமிழாக்கம் பின்வருமாறு:

"ரஹ்மான் அவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்பதே சிறு வயதிலிருந்து என் கனவு. எனது கனவை நனவாக்கிய கடவுளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. ரஹ்மானுடன் ஸ்டூடியோவில் இருக்கும் ஒவ்வொரு தருணமும் எனக்கு விசேஷமானது. அவர் இளைஞர்களுக்கு மிகச்சிறந்த ஆதரவு தருபவர். எப்போதும் புதிய விஷயங்களைத் தேடி முயற்சிப்பவர். அவரது ஸ்டூடியோ புதிய கண்டுபிடிப்புகளுக்கான தொழிற்சாலை போல. ஒவ்வொரு நாளும் எங்களால் புதிதாக ஒன்றை கற்க முடியும். அவர் மிகப்பெரிய உந்து சக்தியாக இருப்பவர். மிகவும் பணிவானவர்.

அவரிடம் இருக்கும் மிகச் சிறந்த பண்பே, நமது படைப்பாற்றலுக்கான முழு சுதந்திரத்தையும் நமக்குக் கொடுத்துவிடுவார். யாரின் யோசனையையும் ஒதுக்க மாட்டார். சில நேரங்கள் நாங்கள் எங்களின் சொந்தப் பாடல்களை அவரிடம் எடுத்துச் சென்று அதை எப்படி மெருகேற்றலாம் என்று யோசனைகள் கேட்போம். உண்மையில் அவரைப் போல ஒரு மனிதரை நான் பார்த்ததில்லை. அவர் ஒரு மேதை, சிறந்த மனிதர், அற்புதமான ஆசான்.

'தும்பி துள்ளல்' ஒரு திருமண வைபவப் பாடல். மகிழ்ச்சி மற்றும் காதல் அதிகம் நிரம்பிய பாடல். ரஹ்மான் அவர்களின் அப்பழுக்கில்லாத மாயம். ஷ்ரேயா கோஷல் அவர்களுடன் இதைப் பாடியது என் அதிர்ஷ்டம். அவருடன் நான் பாடும் முதல் டூயட் இது. அதனால் இது எனக்கு இன்னும் விசேஷமான பாடலாகியுள்ளது.

ஷ்ரேயா அவர்களுடன் இந்தப் பாடலை பதிவு செய்யும் வாய்ப்பை ரஹ்மான் அவர்கள் கொடுத்தார். அதுதான் ஷ்ரேயாவுடன் நான் முதலில் பேசியது. பதிவு முடிந்தவுடன் யார் பாடகர் என்று கேட்டார். நான் தான் பாடினேன் என்று அவரிடம் சொன்னேன்.

அதற்கு அவர் 'உங்கள் குரல் மிகவும் புதிதாக, நன்றாக உள்ளது. உங்கள் குரலே இறுதி வடிவத்திலும் இருக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள்' என்று சொன்னார். இந்த வார்த்தைகள் எனக்கு நிறைய மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்தன. நான் சரியான பாதையில் செல்கிறேன் என்ற உறுதியையும் தந்தன. ரஹ்மான் அவர்களுக்கும் எனது குரல் பிடித்தது. இறுதி வடிவத்தில் இடம் பிடித்தது" என்று நகுல் பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in