மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா? - நெப்போலியன் பதில்
மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு நெப்போலியன் பதிலளித்துள்ளார்
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர், எம்எல்ஏ, எம்.பி. என இருந்தவர் நடிகர் நெப்போலியன். மகனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறிவிட்டார். அங்கு ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
சாம் லோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டேவில்ஸ் நைட்' படத்தில் ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நெப்போலியன். இந்தப் படத்தின் வெளியீட்டுக்குத் திட்டமிட்டபோது கரோனா அச்சுறுத்தல் தொடங்கிவிட்டது. இதனால் முதலில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் உள்ள ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட்டுள்ளனர். விரைவில் இந்தியாவிலும் ஓடிடி தளங்களில் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஜூம் செயலி மூலமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் நெப்போலியன். அப்போது மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணமுள்ளதா என்ற கேள்விக்கு நெப்போலியன் கூறியதாவது:
"2011-ல் அமெரிக்காவில் வீடு வாங்கி குடியேறும்போது, இனிமேல் அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் நிற்கமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். என்னுடைய மகனின் உடல்நிலையைக் கருதி, மருத்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அமெரிக்காதான் சிறந்த இடம் என்று முடிவு செய்து இங்கு குடியேறிவிட்டேன்.
நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொன்னபோது, உடனிருந்த அமைச்சர்கள் எல்லாம் கிண்டல் செய்தார்கள். "அப்படித்தான் சொல்லுவ, உனக்கு மீண்டும் சீட் கிடைக்கும் நீதான் அமைச்சர்" என்றெல்லாம் சொன்னார்கள். நான் நிற்கமாட்டேன் பாருங்கள் என்றேன். இப்போது அரசியலை விட்டு ஒதுங்கி வருடங்கள் ஓடிவிட்டன. அரசியல் ஆசை என்பது சுத்தமாக இல்லை. எம்எல்ஏ, எம்.பி., அமைச்சர் என 50 வயதிற்குள் அனைத்தையும் சாதித்துவிட்டேன்.
இனிமேல் வரும் சந்ததியினர் பார்த்துக் கொள்ளட்டும். வாழ்க்கை முழுவதும் நானே அந்தப் பதவியில் இருக்க வேண்டும் என்ற ஆசை கிடையாது. இனிமேலும் அரசியல் பக்கம் வரக்கூடாது என்பதில் முடிவாக இருக்கிறேன்".
இவ்வாறு நெப்போலியன் தெரிவித்தார்
"தொடர்ச்சியாக திரையுலகைச் சேர்ந்தவர்களே தமிழகத்தில் முதல்வர்களாக இருந்தார்கள். கடந்த 3 ஆண்டுகளாக திரையுலகைச் சாராதவர் முதல்வராக இருக்கிறார். அப்படியென்றால் இனிமேல் திரையுலகைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வர இயலாதா?” என்ற கேள்விக்கு நெப்போலியன் "இப்போது சொல்ல முடியாது. ஏனென்றால் கரோனா அச்சுறுத்தலால் எதையுமே கணிக்க முடியவில்லை. நமது ஊரில் அந்தக் கலாச்சாரம் இருப்பதால் நடக்கலாம், நடக்காமலும் போகலாம். ஏனென்றால், இடையில் ப்ரேக் விழுந்துவிட்டதால், எப்படி வேண்டுமானாலும் மாறும்" என்று பதிலளித்துள்ளார் நெப்போலியன்.
