Published : 29 Jun 2020 20:19 pm

Updated : 29 Jun 2020 20:19 pm

 

Published : 29 Jun 2020 08:19 PM
Last Updated : 29 Jun 2020 08:19 PM

கார்த்திக் ராஜா பிறந்த நாள் ஸ்பெஷல்: இசைஞானியின் பேர் சொல்லும் தலைமகன் 

karthik-raja-birthday-article

சென்னை

இந்தியத் திரை இசை வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்ட மேதையான இளையராஜா ஆயிரம் படங்களைக் கடந்து இன்னும் சினிமா இசையமைப்பாளராகத் தீவிரமாக இயங்கிவருகிறார். அவருடைய இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவும் மாபெரும் ரசிகர் படையைக் கொண்ட இசையமைப்பாளராகத் திகழ்கிறார். இளையராஜாவின் மூத்த மகனும் தந்தையையும் தம்பியையும்போலவே மிகத் திறமை வாய்ந்த இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவுக்கு (ஜூன் 29) இன்று பிறந்த நாள்.

கார்த்திக் ராஜா, 1990களிலும் புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகளில் பல மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்த பாடல்கள் தலைமுறைகளைக் கடந்து ரசிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை. பதின்ம வயதிலேயே தந்தையுடன் இசைப்பதிவு ஸ்டுடியோவுக்குச் செல்லத் தொடங்கிவிட்டார் கார்த்திக் ராஜா. மேற்கத்திய செவ்வியல் இசையையும் கர்நாடக இசையையும் முறைப்படி பயின்றார். இசையமைப்புப் பணிகளில் இளையராஜாவுக்குத் துணையாகவும் பக்க பலமாகவும் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து பணியாற்றிவருகிறார்.


1992-ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த்-குஷ்பு நடிப்பில் இளையராஜா இசையில் வெளியான 'பாண்டியன்' படத்தில் பிரபலமான காதல் பாடலான 'பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா' பாடலுக்கு இசையமைத்தவர் கார்த்திக் ராஜா. அதுவே அவர் இசையமைத்த முதல் பாடல். அதன் பிறகு இளையராஜா இசையமைப்பாளராகப் பணியாற்றிய 'உழைப்பாளி', 'அமைதிப்படை', 'சக்கரதேவன்' உள்ளிட்ட சில படங்களுக்குப் பின்னணி இசை அமைத்தவர் கார்த்திக் ராஜாதான்.

முதல் படத்துக்கே விருது

1996-ல் ராஜ்கிரண் - வனிதா விஜயகுமார் நடிப்பில் வெளியான 'மாணிக்கம்' படத்தின் மூலம் முதன்மை இசையமைப்பாளராக அறிமுகமானார் கார்த்திக் ராஜா. அந்தப் படத்தில் தங்கை பவதாரிணியைப் பாட வைத்து அவர் இசையமைத்த 'சந்தனம் தேச்சாச்சு என் மாமா சங்கதி என்னாச்சு' என்ற பாடல் ரசிகர்களை ஈர்த்தது. அடுத்ததாக அப்போதைய பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான விஜயகாந்தின் 'அலெஸாண்டர்' படத்துக்கு இசையமைத்தார். இந்தியில் ஜாக்கி ஷெராஃப் நடித்த 'கிரஹண்' படத்துக்கு இசையமைத்துச் சிறந்த புதுமுக இசையமைப்பாளருக்கான ஃபிலிம்ஃபேர் சிறப்பு விருதைப் பெற்றார்.

அழிவில்லாமல் வீசும் காற்று

1997-ல் அமிதாப் பச்சன் தயாரிப்பில் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் அஜித் - விக்ரம் - மகேஷ்வரி நடித்த 'உல்லாசம்' படம் கார்த்திக் ராஜாவுக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தது. அந்தப் படத்தின் 'வீசும் காற்றுக்கு' என்ற பாடல் அன்று முதல் இன்றுவரை எப்போதும் ரசிகர்களால் மிகவும் விரும்பிக் கேட்கப்படும் பாடலாக அமைந்தது. அதே படத்தில் இளையராஜா பாடிய 'யாரோ யார் யாரோ', கமல்ஹாசன் பாடிய 'முத்தே முத்தம்மா' ஆகிய பாடல்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன.

அடுத்த ஆண்டில் சுந்தர்.சி இயக்கிய 'நாம் இருவர் நமக்கு இருவர்', கமல்ஹாசனின் 'காதலா காதலா' ஆகிய படங்களுக்கு இசையமைத்தார் கார்த்திக் ராஜா. இரண்டிலும் சிறப்பான பாடல்கள் அமைந்திருந்தன. குறிப்பாக 'காதலா காதலா'வில் 'சரவண பவ வடிவழகா' என்ற கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட ஆன்மிகப் பாடல் பாணியில் அமைந்த காதல் பாடலை மிகப் புதுமையான வடிவத்தில் ரசிக்கத்தக்க வகையில் உருவாக்கியிருந்தார்.

ரசவாதம் செய்த ரகசியம்

2001-ம் ஆண்டு மணிரத்னம் தயாரிப்பில் அழகம் பெருமாள் இயக்குநராக அறிமுகமான 'டும் டும் டும்' படம் கார்த்திக் ராஜாவின் திரை வாழ்வில் ஒரு பொக்கிஷம் எனலாம். 'தளபதி' படத்துக்குப் பிறகு தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தயாரிக்கும் படங்களிலும் இளையராஜாவுடன் பணியாற்றியிராத மணிரத்னம் இந்தப் படத்தில் கார்த்திக் ராஜாவை இசையமைப்பாளர் ஆக்கினார். இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் வெற்றிபெற்றன என்றாலும் 'ரகசியமாய்' என்ற கர்நாடக ராகத்தின் அடிப்படையில் அமைந்த காதல் பாடலை எப்போதும் கேட்டாலும் மனதில் ஏதோ ரசவாதம் நிகழ்வதை உணர முடியும். 'உன்பேரைச் சொன்னாலே' என்ற மென்சோக மெலடிப் பாடல் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் பொலிவிழக்காமல் இருக்கிறது.

இந்த நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் 'டும் டும் டும்', 'உள்ளம் கொள்ளை போகுதே', 'ஆல்பம்', 'குடைக்குள் மழை', 'நெறஞ்ச மனசு', 'நாளை', 'படைவீரன்' உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் கார்த்திக் ராஜா இவற்றில் பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்துள்ளார்.

பின்னணி இசையில் முன்னணி

பாடல்கள் மட்டுமல்லாமல் தந்தையைப் போலவே பின்னணி இசையிலும் ஜொலித்தவர் கார்த்திக் ராஜா. இளையராஜாவே 'இசை' என்று தன் பெயரைத் தாங்கிவரும் படங்களுக்கு இவரைப் பின்னணி இசையமைக்க அனுமதித்திருக்கிறார் என்பதிலிருந்து பின்னணி இசையில் கார்த்திக் ராஜாவின் அபாரத் திறமையைப் புரிந்துகொள்ளலாம். அதோடு விஜய் நடித்த 'புதிய கீதை' உள்பட யுவன் சங்கர் ராஜா இசையமைத்த சில படங்களுக்கும் 'அரண்மனை', 'தில்லுக்குத் துட்டு' உள்ளிட்ட வேறு சில பிரபலமான வெற்றிப் படங்களுக்கும் பின்னணி இசையமைத்தவர் கார்த்திக் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தைக்கு தக்க துணை

ஒரு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவைக் காட்டிலும் இளையராஜாவின் பாணியை அதிகமாகப் பின்பற்றியவர் கார்த்திக் ராஜா. கார்த்திக் ராஜாவின் இசையே இளையராஜாவின் இசைக்கு மிக நெருக்கமானது என்று சொல்லலாம். மெலடி, செவ்வியல் இசைப் பாடல்கள், ஆட்டம் போட வைக்கும் வேகப் பாடல்கள், மேற்கத்திய இசை பாணியைச் சார்ந்த பாடல்கள் என பல வகையான பாடல்களில் தன் திறமையை நிரூபித்தவர் கார்த்திக் ராஜா.,

பல வெற்றிப் பாடல்களையும் சிறந்த பின்னணி இசையையும் கொடுத்திருந்தாலும் 50க்கும் குறைவான படங்களுக்கே இசையமைப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார் கார்த்திக் ராஜா. தனித்து இயங்குவதை விட தந்தைக்கு, தந்தையின் பிரம்மாண்ட சாதனைகளுக்குத் துணையாக இருப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார் என்பதே இதற்குக் காரணம். இப்போது இளையராஜா இசையமைக்கும் படங்களுக்கு இசைக் கருவிகளை ஒழுங்குபடுத்துபவராகவும் (Arranger) உலகின் பல பகுதிகளில் நடக்கும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவராகவும் தொடர்ந்து செயல்படுகிறார்.

அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'மாமனிதன்' படத்துக்கு முதல் முறையாக இளையராஜா - கார்த்திக் ராஜா- யுவன் சங்கர் ராஜா மூவரும் இணைந்து இசையமைத்து வருகிறார்கள். இந்தப் படம் இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தொடர்ந்து கார்த்திக் ராஜா நிறையப் படங்களுக்கு இசையமைத்து திரையிசை ரசிகர்களை மென்மேலும் மகிழ்விக்க வேண்டும். இசைத் துறையில் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று இந்தப் பிறந்த நாளில் அவரை மனதார வாழ்த்துவோம்.

தவறவிடாதீர்!


கார்த்திக் ராஜாகார்த்திக் ராஜா பிறந்த நாள்கார்த்திக் ராஜா பிறந்த நாள் ஸ்பெஷல்இசைஞானியின் தலைமகன்இளையராஜா மகன்Karthik rajaKarthik raja birthday

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x