

தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் முதல் படத்தில் சுந்தீப் கிஷன் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
'அட்டகத்தி', 'பீட்சா', 'சூது கவ்வும்', 'தெகிடி', 'முண்டாசுப்பட்டி' உள்ளிட்ட பல்வேறு வரவேற்பு பெற்ற படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். தற்போது நலன் குமரசாமி இயக்கி வரும் படம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'இறைவி' ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார்.
தயாரிப்பாளர் சி.வி.குமார் விரைவில் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியானவண்ணம் இருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் சி.வி.குமார் இயக்குநராக இருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்பட்டது. சி.வி.குமார் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுந்திப் கிஷன் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஜிப்ரான் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்க இருக்கின்றன. அக்டோபர் 5ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.