வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை

வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
Updated on
1 min read

வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள் என்று பாடகி ஜானகி ரசிகருடன் பேசும் போது வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய திரையுலகில் பழம்பெரும் பாடகியாக இருப்பவர் ஜானகி. 17 மொழிகளில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேள்' என்று செல்லமாக அழைக்கப்படுபவர். 4 தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள் என இவர் அடைந்த பெருமைகள் ஏராளம்.

2013-ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசாங்கம் பத்ம பூஷன் விருது அறிவித்தது. ஆனால், இது தனக்கு தாமதமானது என்று நிராகரித்துவிட்டார் ஜானகி. 2016-ம் ஆண்டு தான் திரையுலகிலிருந்து விலகுவதாக அறிவித்து, ஹைதராபாத்தில் தனது மகனுடன் வாழ்த்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்னதாக, இவரது உடல்நலம் குறித்து வதந்தி உருவானது. அதற்கு அவரும், அவரது குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, இன்று (ஜூன் 28) மதியம் முதலே ஜானகி குறித்து மீண்டும் வதந்தி உருவானது. இதனால் சமூக வலைதளத்தில் பரபரப்பு உண்டானது. இதற்கு அவருடைய மகன் முரளி கிருஷ்ணா மற்றும் இசையமைப்பாளர் தீனா ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர்.

இதனிடையே ரசிகர் ஒருவருடன் பாடகி ஜானகி இன்று (ஜூன் 28) பேசியுள்ள ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஜானகி அம்மா பேசியிருப்பதாவது:

"எல்லாருமே போன் போட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை போன் தெரியுமா?. எதற்கு இந்த மாதிரி செய்தியை வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இது முதல் முறையல்ல, 6 வது முறை. சும்மா அநியாவசமாக வேண்டுமென்றே செய்து கொண்டிருக்கிறார்கள்.

முன்னதாக இதே மாதிரி செய்தி வந்த போது வாட்ஸ்-அப்பில் பேசி அனுப்பினேன். இந்த மாதிரி வதந்திகள் எல்லாம் வேண்டாம். இந்த மாதிரி செய்தி எல்லாம் கேட்டால் சிலருக்கு உடல்நிலை பாதிக்கும். இந்த மாதிரி பொய் எல்லாம் சொல்லி என்னை நீங்க கொல்லாதீங்க என்று நல்ல திட்டிவிட்டேன். மறுபடியும் இப்படி செய்கிறார்கள். "

இவ்வாறு பாடகி ஜானகி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in