ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணம்: தனிப்பட்டவர்கள் தவறா? அமைப்பின் தவறா?- நடிகர் கார்த்தி கேள்வி

ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணம்: தனிப்பட்டவர்கள் தவறா? அமைப்பின் தவறா?- நடிகர் கார்த்தி கேள்வி
Updated on
1 min read

ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் தனிப்பட்டவர்கள் தவறா அல்லது அமைப்பின் தவறா என்று நடிகர் கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன. தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் சூர்யா, நேற்றிரவு (ஜூன் 27) காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கைக்கு சமூக வலைதள பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சூர்யாவின் அறிக்கையைக் குறிப்பிட்டு அவரது தம்பியும் நடிகருமான கார்த்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்த வலிமிகுந்த சம்பவமும், ஜெயராஜ் குடும்பத்துக்கு அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியும் நமது நினைவுகளை நீண்ட நாட்களுக்கு ஆக்கிரமித்திருக்கும். இது ஒரு சில தனிப்பட்டவர்களின் தவறா அல்லது ஒட்டுமொத்த அமைப்பின் தவறா என்பது இந்த வழக்கு எப்படி கையாளப்படுகிறது என்பதன் மூலம் தெரிந்துவிடும்"

இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in