

புற்று நோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகன் ரவிச்சந்திரனை கடைசி ஆசையை நிறைவேற்றி வைத்தார் இசையமைப்பாளர் இளையராஜா.
சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஆர்.எஸ். ரவிச்சந்திரன். அவருக்கு வயது 44. தாய், தந்தை மறைந்து விட்ட நிலையில் உறவினர்கள் பராமரிப்பில் வளர்ந்து வந்த ரவிச்சந்திரனுக்கு திருமணம் ஆகவில்லை. தினக்கூலியாக வேலை பார்த்து வந்தார்.
புகைப்பழக்கம் உள்ள இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொடர்ந்து இருமல் வந்ததால் மருத்துவரிடம் காட்டியிருக்கிறார்கள். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புற்று நோய் முற்றிய நிலையில் இருப்பதை கண்டுபிடித்தனர். ரவிச்சந்திரன் மரணத்தின் வாசலில் இருப்பதை அவரது உறவினர்களிடம் சொன்ன மருத்துவர்கள், அவர் ஆசைப்பட்டதை நிறைவேற்றி வையுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இளையராஜாவின் தீவிர ரசிகரான ரவிச்சந்திரன் ஒரே ஒரு முறை அவரை சந்திக்க வேண்டும் என்று தனது இறுதி ஆசையைத் தெரிவித்திருக்கிறார். இளையராஜாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட, உடனே வரச்சொல்லுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
அதன்படி உறவினர்கள் அவரை இளையாராஜா இசையமைக்கும் பிரசாத் ஸ்டுடியோவிற்கு ரவிச்சந்திரனை அழைத்து வந்தனர். அங்கு இளையராஜா ரவிச்சந்திரனுக்கு ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.
அப்போது ரவிச்சந்திரன் "ஐயா, 80ம் ஆண்ல் இருந்து உங்களின் தீவிர ரசிகன். எனக்கு சோகம், சந்தோஷம் எதுவானாலும் எனக்கு உங்கள் பாட்டு தான். கவலை மறந்து இருப்பேன்யா” என்று கூற மிகவும் நெகிழ்ந்து விட்டார் இளையராஜா.