ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிப்பு: அஜித் கொடுத்த யோசனை

ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிப்பு: அஜித் கொடுத்த யோசனை
Updated on
1 min read

ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கலாம் என்று அஜித் கொடுத்த யோசனையை, சென்னையில் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு சென்னை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் அஜித். அதன் மூலம் ஆளில்லா விமானங்களை உருவாக்க மாணவர்களுக்கு உதவினார். அஜித்தின் வழிகாட்டுதலில் 'தக்‌ஷா' அணியின் ட்ரோன் (ஆளில்லா விமானம்) நீண்ட நேரம் வெற்றிகரமாகப் பறந்து சாதனை படைத்தது. மேலும் பெங்களூருவில் நடந்த ட்ரோன் ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துகொண்டு பரிசுகள் வென்றது.

தற்போது இந்த தக்‌ஷா அணியின் உதவியுடன் தமிழகத்தில் கரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் ஆளில்லா விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது. இந்தப் பணியில் தொடர்புடைய டாக்டர் கார்த்திக் நாராயண் இந்தத் தகவலை, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக டாக்டர் கார்த்திக் நாராயண் கூறுகையில், ''சென்னையில் ஆளில்லா விமானங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கலாம் என்ற யோசனையை அஜித் முன்வைத்தார். அதன்படி சோதனை முயற்சியாக சென்னையில் இது செயல்படுத்தப்பட்டு அது வெற்றிகரமாக முடிந்தது. மற்ற மாவட்டங்களிலும் இதைச் செயல்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே திருநெல்வேலி ஆட்சியருக்கு இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.

இந்தக் காணொலியை அஜித் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். மேலும், #AjithLedDroneToFightCorona என்ற ஹேஷ்டேகையும் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in