

ஆஸ்தான ஒளிப்பதிவாளரான கண்ணனின் இறுதிச் சடங்கில் பாரதிராஜா கலந்துகொண்டார் என்று அவருக்கு நெருக்கமான நண்பர்கள் தெரிவித்தனர்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா இயக்கிய படங்களில் 'நிழல்கள்' தொடங்கி 'பொம்மலாட்டம்' வரை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் கண்ணன். 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார். அதில் சுமார் 40 படங்கள் பாரதிராஜாவின் படங்கள்தான். அவர் உடல்நலக் குறைவால் ஜூன் 13-ம் தேதி பிற்பகல் காலமானார்.
இந்தச் சமயத்தில் தனது தங்கையைப் பார்க்க தேனிக்குச் சென்றிருந்தார் பாரதிராஜா. அங்கேயே தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்திலும் ஈடுபட்டு வந்தார். கண்ணனின் மரணச் செய்தியைக் கேட்டு, மிகவும் வருந்தினர். மேலும், தனது நண்பர் கண்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாரதிராஜா பேசிய வீடியோவும் வெளியானது.
ஜூன் 14-ம் தேதி கண்ணனின் உடல் தகனம் செய்யப்பட்டது. தனது 40 படங்களில் பணிபுரிந்த கண்ணனின் இறுதிச் சடங்கில் பாரதிராஜா கலந்து கொள்ளவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள். ஆனால், பாரதிராஜா கலந்து கொண்டார் என்று அவரது நண்பர்கள் தெரிவித்தார்கள்.
இது தொடர்பாக அவருக்கு நெருக்கமான நண்பர்களிடம் விசாரித்தபோது, "கண்ணன் மறைந்தவுடன், பாரதிராஜா இரங்கல் தெரிவித்த வீடியோ வெளியிடப்பட்டது. இதனால் பலரும் பாரதிராஜா கலந்து கொள்ளவில்லை என்று நினைத்துவிட்டார்கள். தேனியில் மாலை வரை பாரதிராஜா மிகவும் சோகமாகவே இருந்தார்.
கண்ணன் முகத்தைப் பார்த்தே ஆக வேண்டும். என்ன தடைகள் வந்தாலும் சரி, சென்னைக்குப் போயே ஆக வேண்டும் என்று அன்று இரவு 9 மணிக்குக் கிளம்பினார் பாரதிராஜா. அதிகாலை சென்னை வந்தவர், நேராக கண்ணன் உடலைப் பார்த்து ரொம்பவே உடைந்து போய் அழுதார்.
மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லும்போதும் கூடவே சென்றார். அப்போது கண்ணனின் மகள், "அப்பா சிரிச்சுட்டே இருக்கார் அங்கிள்" என்று உடலைப் பார்த்து அழ, உடனே தேம்பித் தேம்பி அழுதார் பாரதிராஜா. கண்ணனின் முகத்தை இனிமேல் எப்படிப் பார்ப்பேன் என்று மிகவும் அழுது தள்ளாடி கீழே விழுந்தவரை, அருகில் இருந்தவர்கள் தாங்கிப் பிடித்து சமாதானம் செய்தார்கள்.
தனது உயிர் நண்பன் கண்ணனின் இறுதிச் சடங்கில் பாரதிராஜா கலந்துகொண்டார்" என்று தெரிவித்தார்கள்.