இளையராஜா நல்ல தம்பியை தவற விட்டுவிட்டான்: இயக்குநர் பாரதிராஜா

இளையராஜா நல்ல தம்பியை தவற விட்டுவிட்டான்: இயக்குநர் பாரதிராஜா
Updated on
1 min read

இளையராஜா நல்ல தம்பியை தவற விட்டுவிட்டான் என்று கங்கை அமரனுக்கு நடந்த பாராட்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசும் போது குறிப்பிட்டார்.

ஜூன் 21-ம் தேதி உலக இசை தினத்தை முன்னிட்டு டோக்கியோ தமிழ் சங்கம் கங்கை அமரனுக்கு பெரிய பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழா ஜூம் செயலி வெளியே நடைபெற்றது.

இதில் உலகமெங்கிலும் உள்ள முன்னணி தமிழ் சங்க நிர்வாகிகள், இயக்குநர் பாரதிராஜா, சந்தானபாரதி, மனோ பாலா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு கங்கை அமரனுடன் பணிபுரிந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். சுமார் 4 மணி நேரம் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டு பேசியதாவது:

"இந்த உலகத்தில் உன்னை மாதிரி வெள்ளந்தியானவன், வெளிப்படையானவன் யாருமே இல்லை. அண்ணன் - தம்பிகள் நீ ஒரு வித்தியாசம். முதல் பாட்டிலேயே கங்கை நதியைப் பற்றியெல்லாம் எழுதியிருப்பார். நீ எல்லாம் கங்கை நதியைப் பார்த்திருப்பாயா. ஆனால் யோசனை செய்தி எழுதியிருப்பாய் பார்த்தியா அது தான் முக்கியம். என்னுடைய படத்தில் இடம்பெற்ற உன்னுடைய பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்.

கல்யாணம் செய்து 2 அற்புதமான குழந்தைகள் அப்பாவாக இருக்கிறான். அனைவருமே பாரதிராஜா ரொம்ப ஒப்பன் டாக் என்பார்கள். என்னைவிட ரொம்ப ஒப்பன் டாக் கங்கை அமரன். உண்மையில் அவனுடைய அம்மா - அப்பா செய்த புண்ணியம். எந்தவொரு கஷ்டம் வந்தாலும், அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்ட ஒரு பையன். அவன் பெரிதாகப் படிக்கவில்லை. ஆனால், அவனுடைய பாடல் வரிகள் உயிரோடு இருக்கிறது.

இளையராஜாவுக்கு எப்படி சரஸ்வதி ஐந்து விரல்களில் உட்கார்ந்திருக்கிறாளோ, அதே மாதிரி கங்கை அமரனுக்கு மூளை முழுக்க சரஸ்வதி உட்கார்ந்திருக்கிறாள். நீங்கள் கவலையோடு அவனைப் பார்க்கப் போனீர்கள் என்றால், உங்களை அப்படியே சிரிக்க வைத்து மாற்றிவிடுவான். உலகமெல்லாம் ஒன்றுமே இல்லை என்று ஆக்கிவிடுவான். ஆயிரம் இருந்தாலும் இளையராஜா நல்ல அற்புதமான கலைஞன். இன்னமும் சொல்வேன், இளையராஜா நல்ல தம்பியை மிஸ் செய்துவிட்டான். இவன் ஒரு நல்ல தம்பி"

இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in