ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு விஜய் ரசிகர்கள் நிதியுதவி

ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு விஜய் ரசிகர்கள் நிதியுதவி
Updated on
1 min read

எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு நடிகர் விஜய் ரசிகர்கள் ரூ.1 லட்சம் நிதி வழங்கினர். முன்னாள் ராணுவத்தினர் வீரவணக்க அஞ்சலி செலுத்தினர்.

லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ மோதலில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்கலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிதி வழங்கப்பட்டது. ராமநாதபுரம் எம்எல்ஏ எம்.மணிகண்டன் ரூ. 2.25 லட்சம், திமுக சார்பில் ராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்சா, முத்துராமலிங்கம் ஆகியோர் ரூ.2 லட்சம் வழங்கினர்.

இந்நிலையில் நடிகர் விஜய் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை ரத்து செய்து, ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு உதவ விஜய் ரசிகர் மன்றத் தலைமை நிர்வாகிகள் அறிவித்தனர். அதன்படி ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்ட நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரூ.1 லட்சம் நிதிக்கான வரவோலையை, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ஜெ.ஜெயபாலா, தேனி மாவட்டத் தலைவர் பாண்டி ஆகியோர் ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினரிடம் நேற்று வழங்கினர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அருகே முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்க அலுவலகத்தில், அச்சங்கத்தின் சார்பில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனிக்கு மலர் தூவி வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான முன்னாள் ராணுவத்தினர் கலந்து கொண்டனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in