Published : 22 Jun 2020 02:32 PM
Last Updated : 22 Jun 2020 02:32 PM

எங்களுக்கு வயதாகக் கூடாதா? - நடிகை சமீரா ரெட்டி பதிவு

சென்னை

பெண்களுக்கு வயதாகக் கூடாதா, என்றும் இளமையாக இருக்க வேண்டிய அழுத்தம் எதற்கு என்று நடிகை சமீரா ரெட்டி பதிவிட்டுள்ளார்.

கடந்த 3 மாதங்களாக நிலவும் ஊரடங்கில் திரைப்படம் தொடர்பான வேலைகளும் முடங்கியுள்ளதால், திரை நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைதளங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த ஊரடங்கில் தங்கள் வாழ்க்கை, உடற்பயிற்சி, சமையல், ஒப்பனை, குழந்தை வளர்ப்பு என பலவிதமான காணொலிகளையும், புகைப்படப் பதிவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் நடிகை சமீரா ரெட்டி, நடிப்பைக் கைவிட்ட பிறகு தனது குடும்பம், கணவர் குழந்தை என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட காலமாகவே தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். தற்போது ஊரடங்கு சமயத்தில் #ImperfectlyPerfect என்ற தலைப்பில் தொடர்ந்து தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் வயது குறித்து ஒரு காணொலியைப் பகிர்ந்துள்ளார். அதோடு சில வரிகளையும் எழுதியுள்ளார்.

அதில் சமீரா ரெட்டி கூறியிருப்பதாவது:

"நான் பிறந்த வருடம் 1978. எனக்கு 41 வயதாகிறது. ஒரு ஆணின் வயதைக் கேட்கலாம், பெண்ணின் வயதைக் கேட்கக் கூடாதா? ஒரு ஆணுக்கு வயதானால் அவர் இன்னும் அழகாக, கவர்ச்சிகரமாக மாறுவதாகவே நாம் என்றும் சொல்கிறோம். ஆனால் பெண்ணுக்கு வயதானால் அவள் வயதானவள். ஏன் இந்த இரட்டை நிலை? நான் நடிகையாக இருந்தபோது இதுகுறித்து அதிகம் பயந்திருக்கிறேன். அப்போது கூகுள் தேடலில் என் வயது தப்பாக இருந்ததற்கு நான் சந்தோஷப்பட்டிருக்கிறேன்.

எங்களுக்கு வயதாகக் கூடாதா? தொடர்ந்து வயது பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்து வருகிறேன். எப்போதும் இளமையாக இருக்க வேண்டியதன் அழுத்தம் பெண்களிடம் தெளிவாகத் தெரிகிறது. இதுதான் தரம் என்று சில கருத்துகள் நிர்ணயிக்கப்பட்டு அவை நமக்குள் ஊறிவிட்டன. 30 வயதுக்கு மேல்தான் நீங்கள் யார் என்பதே உங்களுக்குப் புரியும். எனவே அந்தக் காலகட்டம் அற்புதமானது. 40 வயதுக்கு மேல் நாம் விரும்பும் சுவையான மதுவைப் போல மாறுவோம். வயது என்பது வெறும் எண்ணிக்கைதான், உடல் எடை என்பது வெறும் எண்ணிக்கைதான். அச்சமின்றி இருங்கள்".

இவ்வாறு சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x