Published : 22 Jun 2020 12:09 pm

Updated : 22 Jun 2020 12:09 pm

 

Published : 22 Jun 2020 12:09 PM
Last Updated : 22 Jun 2020 12:09 PM

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: எல்லோருக்கும் பிடித்த வெற்றி நாயகன்

vijay-birthday-special

1992-ம் ஆண்டில் பிறந்த பலருக்கு இப்போது திருமணம் ஆகியிருக்கும். அப்போது குழந்தைகள் ஆக இருந்த பலர் இப்போது குழந்தைகளுக்கு பெற்றோராகியிருப்பார்கள். இளைஞர்கள் நடுத்தர வயதுக்காரர்களாகி குடும்பப் பொறுப்பைச் சுமந்துகொண்டிருப்பார்கள். விளையாட்டு வீரர்கள் ஓய்வுபெற்றிருப்பார்கள். இந்த 28 ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. இந்த மாற்றங்களையெல்லாம் கடந்து அன்று முதல் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது இன்று (ஜூன் 22) நடிகர் விஜய்யின் திரைப் பயணம்.

'சட்டம் ஒரு இருட்டறை', 'நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட பல படங்களின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனான விஜய் தந்தை இயக்கிய படங்களில் சிறுவனாக நடித்திருக்கிறார். 1992-ல் வெளியான 'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அன்று முதல் இன்று வரை அயராத உழைப்பு, அபாரமான திறமை. என்றும் மாறாத இளமைத் தோற்றம். நகைச்சுவை உணர்வு, நட்பார்ந்த பேச்சும் செயல்பாடுகளும்., ரசனை மாற்றத்துக்கு ஏற்ப தன் திறமைகளை வளர்த்துக்கொண்டு தகவமைத்துக்கொள்ளும் பண்பு, போட்டி, பொறாமை. வெறுப்பு, துரோகம் ஆகியவற்றைக் கடந்து முன்னேறிச் சென்றுகொண்டே இருக்கும் மன உறுதி, 'தளபதி' என்ற ஒற்றைச் சொல்லுக்காக உயிரைக்கொடுக்கும் ரசிகர் பட்டாளம். ரசிகர்கள் என்னும் வட்டத்தைத் தாண்டி வெகுஜன சினிமாவை ரசிப்பவர்களிடமும் நற்பெயரையும் மரியாதையையும் பெற்றிருக்கும் பாங்கு, பல இமாலய வெற்றிப் படங்களைக் கொடுத்தும் என்றும் அமைதியாகப் புன்னகை தவழும் முகத்துடன் தோன்றும் பக்குவம் என அனைத்தாலும் ஈர்க்கப்பட்டு இன்று தமிழகம் முழுவதும் ஒரு திருவிழாவைப் போல் விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. மக்கள் திலகம் எம்ஜி.ஆர். சூப்பர்ஸ்டார் ரஜினிக்குப் பிறகு உச்ச நட்சத்திரமாக, வசூல் சக்ரவர்த்தியாக அனைத்து வயதினருக்கும் பிடித்திருக்கும் நடிகனாக உயர்ந்திருக்கும் விஜய்யின் இந்த பயணம் எல்லா வெற்றிப் பயணங்களையும் போலவே அசாதாரணமானது.

நிலைப்பதற்கான போராட்டம்

'நாளைய தீர்ப்பு' வெளியானபோது பலர் அவருடைய தோற்றத்தை விமர்சனம் செய்தனர். அதன் பிறகும் சில வெற்றிகளையும் தோல்விகளையும் மாறி மாறி எதிர்கொண்ட விஜய் ஒரு நாயகனாக நிலையான இடத்தைப் பிடிக்க பல வருடங்கள் போராட வேண்டியிருந்தது. 'பூவே உனக்காக', 'காதலுக்கு மரியாதை', 'லவ் டுடே', 'துள்ளாத மனமும் துள்ளும்' உள்ளிட்ட படங்கள் பெற்ற மிகப் பெரிய பாராட்டுகளும் வெற்றியும் அவரை ஒரு நாயகனாக நிலைநிறுத்த உதவின. இவை அனைத்துமே காதலுக்கு முக்கியத்துவம் அளித்த படங்கள். அழகான காதல் படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகே விஜய் முன்னணி நடிகராக கவனம்பெறத் தொடங்கினார். அன்பும் அமைதியும் அப்பாவித்தனமும் நிறைந்த காதலராக அவர் அந்தப் படங்களில் வெளிப்பட்ட விதம் அனைவரையும் ஈர்த்தது, குறிப்பாக இளம் பெண்கள் மத்தியில் அவருக்கு ஒரு பெரும் ரசிகர் படை உருவானது.

அழகிய தமிழன்

வெள்ளைத் தோல் கொண்ட நடிகர்களையே பெண்களுக்குப் பிடிக்கும் என்பது ஒரு மாயை. தாங்கள் கல்லூரியிலும் பேருந்து பயணத்திலும் பக்கத்து வீட்டிலும் அன்றாடம் சந்திக்கும் துடிப்பான வாலிபர்களின் திரைப் பிரதிநிதியாக இருந்த விஜய்யை பெண்கள் நேசிக்கத் தொடங்கியதே அவருடைய நட்சத்திர அந்தஸ்துக்கு முக்கிய அடித்தளமிட்டது எனலாம். தலைமுறைகள் தாண்டி இன்றுவரை பெண்கள் பெரும் எண்ணிக்கையில் அவருடைய ரசிகர்களாகத் திகழ்கிறார்கள். 80-களிலும் 90-களிலும் பிறந்த பெண்கள் அவரை தங்கள் வீட்டுப் பையனாகப் பார்த்தார்கள் என்றால் 2000-க்குப் பிறகு பிறந்தவர்கள் அவரை ஒரு அண்ணன் போன்ற மரியாதைக்குரிய இடத்தில் வைத்துப் போற்றுகிறார்கள். தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வந்ததும் திரைக்கு வெளியிலும் கண்ணியமான நபராக நடந்துகொள்வதே விஜய் இந்த ஆத்மார்த்த அன்பைப் பெற உதவியது. அழகான தமிழ் பையன் என்பதற்கு இலக்கணமானார் விஜய்.

அபார நகைச்சுவையாளர்

அபார நகைச்சுவை உணர்வும் அசாத்திய நடனமும் விஜய்யின் தனிச் சிறப்புகள். மிகச் சிறந்த நகைச்சுவை நடிப்பை வழங்கிய நாயக நடிகர் ரஜினி. கதாநாயகர்கள் என்றால் சீரியஸாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்தவர் அவர். அவருக்கு அடுத்து விஜய்யும் அதைச் சாதித்தார். 'பூவே உனக்காக', 'மின்சார கண்ணா', 'ஃப்ரெண்ட்ஸ்', 'வசீகரா', 'கில்லி', 'சச்சின்' வேலாயுதம்' என பல படங்கள் நகைச்சுவைக் காட்சிகளுக்காகப் பெரிதும் ரசிக்கப்படுகின்றன. நகைச்சுவைக் காட்சிகள் இல்லாத விஜய் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கவுண்டமணி, சார்லி, தாமு, விவேக், வடிவேலு, சந்தானம்,சூரி, யோகிபாபு என முன்னணி நகைச்சுவை நடிகர்கள் விஜய்யுடன் கூட்டணி அமைத்தால் இன்னும் சிறப்பாக மிளிர்வார்கள். விஜய்யும் அந்தக்காட்சிகளில் நகைச்சுவையில் தன்னுடைய தனி முத்திரையைப் பதிப்பார். 'மின்சார கண்ணா' போன்ற சில படங்களில் எந்த முன்னணி நகைச்சுவை நடிகரின் துணையும் இல்லாமல் விஜய் ஒருவர் மட்டுமே அபாரமான நகைச்சுவைப் பங்களிப்பைச் செய்து ரசிகர்களை விலா நோகச் சிரிக்க வைத்திருக்கிறார்.

அசாத்திய நடனக் கலைஞர்

நகைச்சுவைக்கு நடனத்தில் முன்னெப்போதும் இல்லாத முன்மாதிரியாகத் திகழ்ந்தார். நகைச்சுவையில் எப்படி ரஜினி ஒரு ட்ரெண்ட் செட்டரோ அதேபோல் நடனத்தில் கமல்ஹாசன் ஒரு ட்ரெண்ட் செட்டர். முறையாக நடனம் பயின்று அபாரமான நடனத்திறமையை திரையில் வெளிப்படுத்தியவர். அவருக்கு அடுத்து நடனத்துக்காகப் பெரிதும் ரசிக்கப்பட்ட நாயக நடிகர் விஜய்தான். விஜய்க்கு முன்பே பிரபுதேவா நடனத்தால் பலரை அசரடித்தாலும் அவர் தொழில்முறை நடனக் கலைஞர். நாயக நடிகராக மட்டும் இருந்தவர்களில் விஜய் அளவுக்கு சிறப்பாக நடனம் ஆடுபவர் வேறு யாரும் இல்லை என்றே சொல்லிவிடலாம். படத்துக்கு படம் மிக வித்தியாசமான மிகக் கடினமான ஸ்டெப்புகளைப் போட்டு அசரடிப்பார். ஆனால் திரையில் பார்க்கும்போது எவ்வளவு கஷ்டமான ஸ்டெப்பை ஆடுகிறேன் பார் என்ற எந்தவிதமான பாவனையும் இருக்காது, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொள்ளாமல் மிக இயல்பாக புன்னகையுடன் சின்ன சின்ன அழகான எக்ஸ்பிரஷன்களுடனும் நடனமாடுவதில் விஜய்க்கு இணையே இல்லைஎன்று சொல்லிவிடலாம்.

இப்போது எவ்வளவு கடினமான ஸ்டெப் என்றாலும் அதை மிக லாகவமாகச் செய்துகாட்டும் அளவுக்கு நடனக் கலையில் முன்னேறிவிட்டார். நடன இயக்குநர்கள் விஜய்யின் நடனத் திறமைக்கும் அது சார்ந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் அளவு சிறப்பான நடனங்களை அமைக்க பெரிதும் மெனக்கெட வேண்டிய அளவு ஒரு நடனக் கலைஞராக பல உயரங்களைக் கடந்திருக்கிறார் விஜய்.

மறுக்க முடியாத மாஸ் இமேஜ்

நகைச்சுவை. நடனம் ஆகியவற்றைத் தாண்டி ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக வெற்றிபெறுவதே ஒரு நடிகருக்கு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தரும். 'தமிழன்', 'பத்ரி', 'பகவதி' போன்ற படங்கள் விஜய்யின் ஆக்‌ஷன் ஹிரோ இமேஜை படிப்படியாக வடிவமைத்தன. 2003-ல் வெளியான 'திருமலை' விஜய்யை ஒரு அசைக்கமுடியாத மாஸ் ஆக்‌ஷன் ஹீரோவாக நிலைநிறுத்தியது. பஞ்ச் வசனங்கள், வண்ணமயமான அறிமுகப் பாடல், மாஸ் காட்சிகள் என ஒரு மாஸ் ஹீரோவாக விஜய்யை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றது இந்தப் படத்தின் வெற்றி, 2000-ம் ஆண்டுக்குப் பிறகு விஜய் மாஸ் படங்களில் அதிகம் நடிக்கத் தொடங்கினார். 'கில்லி', 'திருப்பாச்சி', 'சிவகாசி', 'போக்கிரி' ஆகிய படங்கள் மிகப் பெரிய வசூலைக் குவித்து விஜய்யை ஒரு மாபெரும் மாஸ் நாயகனாக்கின. 'போக்கிரி' படத்தில் இடம்பெற்ற ”ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்கமாட்டேன்'என்பது போல் விஜய் இந்தப் படங்களில் பேசிய பஞ்ச் வசனங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கின்றன.

1990-களிலும் 2000-2010 இடைப்பட்ட ஆண்டுகளிலும் பல வெற்றிப் படங்களையும் தோல்விப் படங்களையும் கொடுத்து படிப்படியாக நட்சத்திர அந்தஸ்தை அடைந்த விஜய் ஒரு குறிப்பிட்ட ஃபார்முலா படங்களில் மட்டுமே நடிப்பவர் என்ற விமர்சனத்தைப் பெற்றார். இத்தனைக்கு வின்செண்ட் செல்வாவின் 'ப்ரியமுடன்' படத்தில் எதிர்ம்றை குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரம். ஃபாசில் இயக்கிய 'கண்ணுக்குள் நிலவு' படத்தில்மனநலப் பிரச்சினை உள்ளவராக நடித்தது, எ.ஸ்ஜே.சூர்யாவின் 'குஷி'யில் வழக்கத்துக்கு மாறான இளைஞனாக நடித்தது,'ப்ரியமானவளே' படத்தில் நவீன என்.ஆர்.ஐ இளைஞனாக நடித்தது, 'சச்சின்' படத்தில் அழகான கல்லூரி இளைஞனாக நடித்தது என வழக்கத்துக்கு மாறான கதைக்களங்களிலும் கதாபாத்திரங்களிலும் நடித்துக்கொண்டுதான் இருந்தார் விஜய்., இவற்றில் மிகவும் வித்தியாசமான படமாக இருந்த 'கண்ணுக்குள் நிலவு' பெரிய வரவேற்பைப் பெறத் தவறியதால் முற்றிலும் மாறுபட்ட முயற்சிகளில் ஈடுபடுவதில் அவருக்குத் தயக்கங்கள். பாடல்கள், நகைச்சுவை, மாஸ் காட்சிகள் போன்ற ஜனரஞ்சக அம்சங்களைக் குறையில்லாத படங்களிலேயே கவனம் செலுத்தினார். அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும் செய்தார். தன் பாதை இதுதான் என்பதில் தெளிவாகவும் இருந்தார்.

அனைவருக்கும் பிடித்த படங்கள்

ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இந்த இமேஜை பேரளவில் மாற்றியிருக்கிறார் விஜய். 'காவலன்', 'நண்பன்', 'துப்பாக்கி', 'கத்தி', 'தெறி', 'மெர்சல்', 'சர்கார்', 'பிகில்' என கடந்த பத்தாண்டுகளில் விஜய் நடித்த பெரும்பாலான படங்கள் மிகப் பெரிய வணிக வெற்றியைப் பெற்றிருக்கின்றன. பல படங்கள் அதுவரையிலான அனைத்து வசூல் சாதனைகளை உடைத்து புதிய சாதனைகளைப் படைத்திருக்கின்றன. 'பிகில்' ரூ.300 கோடி வசூலித்துள்ளது. இந்தப் படங்களின் வெற்றிக்கு முக்கியக் காரணம் விஜய்யின் கதைத்தேர்வு, இந்தப் படங்கள் விஜய் ரசிகர்கள் என்னும் வட்டத்தைத்தாண்டி அனைத்து ரசிகர்களும் ஈர்க்கும் அம்சங்கள் இருந்தன. கடந்த பத்து ஆண்டுகளில் விஜய் படம் என்பதற்கான வரையறை தன்மைகளும் தரமும் பேரளவு மாற்றம் கண்டிருக்கின்றன. விஜய்யின் ஒவ்வொரு படத்தையும் படித்த பெரும் பதவியில் இருக்கும் உயர் வகுப்பினர் முதல் எளிய பின்னணியைக் கொண்டவர்கள் வரை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லா தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். மாஸ் காட்சிகள், பஞ்ச் வசனங்கள், நடனம், நகைச்சுவை, காதல், சென்டிமெண்ட் என ஜனரஞ்சக அம்சங்களைத் தாண்டி வலுவான கதை, சமூகப் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கும் காட்சிகள், மக்களின் சமூக அரசியல் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் வசனங்கள். என எல்லா ரசிகர்களும் தன்னை தொடர்புபடுத்திக் கொள்ளும்படியான விஷயங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக விஜய்யின் அண்மைக் கால படங்கள் அமைந்திருப்பதே இதற்குக் காரணம். இவற்றாலேயே அவர் இன்று உச்ச நட்சத்திர அந்தஸ்தை அடைந்திருக்கிறார்.

பொலிவு குறையாத 'மாஸ்டர்'

அடுத்ததாக 'மாநகரம்', 'கைதி' போன்ற வித்தியாசமான படங்களால் ரசிகர்களை ஈர்த்த லோகேஷ் கனகராஜ் என்னும் இளம் இயக்குநருடனும் இணைந்து 'மாஸ்டர்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தரமான படங்களைத் தரும் அவருடைய முனைப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கலாம். 2012-ல் வெளியான 'நண்பன்' படத்தில் கல்லூரி மாணவராக நடித்த விஜய் இந்தப் படத்தில் பேராசிரியராக நடித்திருக்கிறார்,. ஆனாலும் அழகான இளமையான மாஸ்டராகவே தோன்றுகிறார். 46 வயதாகும் விஜய் இந்தப் படத்தின் போஸ்டர்களில் 30 வயது இளைஞரைப் போல் இருக்கிறார். கரோனா காரணமாக வெளியீடு தள்ளிப் போயிருக்கும் இந்தப் படம் எப்போது வெளியானாலும் பெருவாரியான ரசிகர்களை ஈர்த்து மிகப் பெரிய வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்தடுத்த படங்கள் வெற்றிபெற வேண்டும். ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் இன்னும் பலமடங்கு அதிகரிக்க வேண்டும் அவர் திரைத் துறையில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று இந்தப் பிறந்தநாள் அன்று விஜய்யை மனதார வாழ்த்துவோம்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

விஜய்விஜய் பிறந்த நாள்விஜய் பிறந்த நாள் கட்டுரைவிஜய் பிறந்த நாள் ஸ்பெஷல்விஜய் படங்கள்மாஸ்டர்நடிகர் விஜய்VijayActor vijayVijay birthday specialVijay birthday articleVijay fansவிஜய் ரசிகர்கள்விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author