ஏ.எல்.ராகவன்: நகல் எடுக்கமுடியாத குரல்!

ஏ.எல்.ராகவன்: நகல் எடுக்கமுடியாத குரல்!
Updated on
2 min read

நடிப்பும் இசையும் பின்னிப் பிணைந்த குடும்பத்தில் பிறந்தவர் ஏ.எல்.ராகவன். அந்த மரபின் தொடர்ச்சியே, அவரை திறமை வாய்ந்த நாடக நடிகராகவும் பாடகராகவும் வெளிப்படுத்தியது.

ஏ.எல். ராகவனின் தந்தை அய்யம்பேட்டை லட்சுமணன் பிரபல நாடக நடிகர். சில நாடகங்களில் லட்சுமணனின் மனைவியாக எம்.ஜி.ஆர். நடித்திருக்கிறார். இதை நினைவுகூரும் விதமாகவே பின்னாளில் ஏ.எல்.ராகவனிடம், எம்.ஜி.ஆர்., “நான் உனக்கு சித்தி முறை வேணும்..” என்பாராம் வேடிக்கையாக!

1965ல் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டபோது, ராணுவ முகாம்களில் கலை நிகழ்ச்சி நடத்தும் குழுவிலும் ராகவன் இடம்பெற்றிருந்தார். முகாம்களில் இரவுதான் நிகழ்ச்சிகள் நடக்கும். முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் முன்பாக அன்றைக்கு அறிமுக நடிகையான ஜெயலலிதா, `வெண்ணிற ஆடை’ திரைப்படத்தில் சுசீலா பாடிய `கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல’ பாடலுக்கு நடனம் ஆடினார். ஏ.எல்.ராகவன் `பகைவனுக்கு அருள்வாய்’ எனும் பாரதியாரின் பாடலைப் பாடினார். குடியரசுத் தலைவர் உட்பட எல்லோரையும் உணர்ச்சிவசப்படவைத்து கண்களில் கண்ணீரை வரவைத்தது.

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து, அவரின் மறைவையொட்டி ஜூபிடர் பிக்சர்ஸின் பூமிபழதாசா எழுதிய `உலக மகான் காந்தி’ எனும் பாடலை ஏ.எல்.ராகவன் பாடினார். அன்றிலிருந்து இந்தப் பாடலை தன் வாழ்நாள் முழுவதும் மேடைதோறும் பாடி காந்திக்கு தன்னுடைய அஞ்சலியை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஏ.எல்.ராகவன்.

அவரின் குரல் வளத்தால், `எங்கிருந்தாலும் வாழ்க’ என்று பாடி உருக்கவைக்கவும் முடியும், `என்ன கோபம் நில்லு பாமா’ என்று இளசுகளை உற்சாகப்படுத்தவும் முடியும், `பாப்பா பாப்பா கதை கேளு’ என்று குழந்தைகளை குதூகலப்படுத்தவும் முடியும். இவரின் இந்தத் திறமையை உணர்ந்த பிரபல பாடகர் நௌஷத் மனம் திறந்து, ஏ.எல்.ராகவனின் குரலில் வெளிப்படும் பன்முகத் தன்மையை பாராட்டியிருக்கிறார்.

கர்னாடக இசை மேதையான செம்மங்குடி சீனிவாச அய்யர், “என்னுடைய பேரன்கூட நீ பாடிய திரைப் பாடல்களைப் பாடுவான். கர்னாடக இசையை விட, நீ பாடிய பாடல்களின் புகழ் பரந்துபட்டு பரவியிருக்கிறது” என்று மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்.

“ராஜத்தக்கான்னுதான் எம்.என்.ராஜம்மை கூப்பிடுவோம். ஏ.எல்.ராகவனை அத்தான் என்றுதான் கூப்பிடுவோம். அவ்வளவு சொந்தம். கடந்த மே 29தான் `தம்பதியர் தினம்’ என்று அவர்களிடம் பேசி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தோம். நான் பேசுவதை சிரித்தபடி ரசித்துக் கேட்பார் அத்தான்.

நிறைய மெல்லிசை கச்சேரிகளில் பார்த்திருக்கிறேன். டி.எம்.எஸ். அண்ணன் மாதிரி, சீர்காழி மாமா மாதிரி, பி.பி.எஸ்., சி.எஸ்.ஜெயராமன்.. இப்படிப் பல பேர் குரல்களை நகல் எடுத்துப் பாடும் கலைஞர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் ஏ.எல். ராகவன் குரலில் யாரும் பாடி என்னுடைய அனுபவத்தில் நான் கேட்டதே இல்லை. அப்படிப்பட்ட தனித்தன்மையான குரல் வளம் கொண்ட கலைஞராகத்தான் நான் ஏ.எல்.ராகவனைப் பார்க்கிறேன்” என்கிறார் பிரபல இசையமைப்பாளர்களிடம் கிதார் இசைக் கலைஞராகப் பணியாற்றியவரும், தமிழ்த் திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான எம்.கே.ராதாவின் மகனுமான ராதா விஜயன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in