வைரலான ட்ரெட்மில் நடனம்: அஸ்வின் குமாருக்கு கமல் பாராட்டு

வைரலான ட்ரெட்மில் நடனம்: அஸ்வின் குமாருக்கு கமல் பாராட்டு
Updated on
1 min read

தன் பாடலுக்கு நடிகர் ஒருவர் ஆடிய நடனத்துக்கு கமல் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

1989-ம் ஆண்டு சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் கமல் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அபூர்வ சகோதரர்கள்'. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ' பாடல் மிகவும் பிரபலம். இப்போதும் கமல் பிறந்த நாள், கமல் படம் வெளியீடு உள்ளிட்ட நாட்களில் இந்தப் பாடல் ஒளிபரப்பாகும்.

சில நாட்களுக்கு முன்பு 'அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ' பாடலுக்கு கமல் மாதிரியே நடனமாடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் நடிகர் அஸ்வின் குமார். இதில் சிறப்பு என்னவென்றால், ட்ரெட்மில் ஒடிக் கொண்டிருக்கும்போது, அதன் மீது நடனமாடியிருந்தார். இவர் மலையாளத்தில் பெரும் வரவேற்பு பெற்ற 'ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்யம்' மற்றும் தமிழில் 'துருவங்கள் 16' ஆகிய படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது ட்ரெட்மில் நடனம் சமூக வலைதளத்தில் பெரும் வைரலானது. கமல் ரசிகர்களின் ஃபேஸ்புக் பக்கம், இதர நடிகர்களின் ட்விட்டர் பக்கம் என பலரும் ஷேர் செய்து பாராட்டினார்கள். தற்போது இவரது நடனத்தைப் பார்த்துவிட்டு கமல் பாராட்டியுள்ளார்.

அஸ்வின் குமாரின் நடன வீடியோவைக் குறிப்பிட்டு கமல் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நான் செய்த நல்வினைகள் என் ரசிகரைச் சென்றடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!".

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in