

இணையத்தில் தொடரும் சாடல்களைத் தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளார் கரண் ஜோஹர்.
பாலிவுட்டில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் 14-ம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவருடைய தற்கொலை பாலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. துறைக்குள் இருக்கும் வாரிசு அரசியல் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
குறிப்பாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹரும் அவரது நிறுவனமும் சுஷாந்தின் வாய்ப்புகளை முடக்கியதாகவும் ஒரு தரப்பு குற்றம் சாட்டி வருகிறது. இதனால் இணையத்தில் பல்வேறு ஹேஷ்டேகுகளை உருவாக்கி, கரண் ஜோஹருக்கு எதிராக ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும், கரண் ஜோஹர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் வீடியோக்களும் அதில் கரண் ஜோஹரின் கிண்டல்களை வைத்தும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளார் கரண் ஜோஹர்.
ட்விட்டர் தளத்தில் தான் பின்தொடர்ந்த அனைத்து நடிகர்களின் பக்கங்களிலிருந்தும் விலகிவிட்டார். தற்போது பிரதமர் நரேந்திர மோடி, அமிதாப் பச்சன், ஷாரூக் கான், அக்ஷய் குமார் ஆகிய நால்வர் மற்றும் தனது தர்மா தயாரிப்பு நிறுவனம், அது தொடர்பான ட்விட்டர் பக்கங்கள் என மொத்தம் 8 பேரை மட்டுமே பின்தொடர்ந்து வருகிறார்.
ஆலியா பட், சோனம் கபூர், அனில் கபூர் என முன்னணி நடிகர் - நடிகைகளின் ட்விட்டர் பக்கங்கள் அனைத்தையும் பின் தொடர்வதை நிறுத்திவிட்டார். மேலும், சுஷாந்த் சிங் தற்கொலை செய்த அன்று இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்தார். அதற்குப் பிறகு இதுவரை எந்தவொரு ட்வீட்டையும் அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.