

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள வெப் சீரிஸிற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார் பி.சி.ஸ்ரீராம்.
'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தைத் தொடர்ந்து 'ஜோஷ்வா' எனும் படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தக் கரோனா ஊரடங்கில் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' படத்துக்காக எழுதிய கதையிலிருந்து ஒரே ஒரு காட்சியை மட்டும் எடுத்து 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார்.
இந்தக் குறும்படத்தைத் தொடர்ந்து 'ஒரு சான்ஸ் குடு' என்ற பாடலொன்றையும் இயக்கி வெளியிட்டார். இரண்டுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் அமேசான் நிறுவனத்துக்கு 2 வெப் சீரிஸ் இயக்கவுள்ளதாகக் குறிப்பிட்டு இருந்தார் கெளதம் மேனன்.
தற்போது அமேசான் நிறுவனத்துக்காக கெளதம் மேனன் இயக்கும் வெப் சீரிஸ் ஒன்றுக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இது தொடர்பாக பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"கரோனா லாக்டவுன் முடிந்தவுடன், கெளதம் மேனன் இயக்கவுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் பணிபுரியவுள்ளேன். இது அமேசான் நிறுவனத்துக்காக. கரோனாவால் நீண்ட நாட்கள் கழித்துப் பணிபுரிய ஆவலுடன் காத்திருக்கிறேன்"
இவ்வாறு பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
கெளதம் மேனன் - பி.சி.ஸ்ரீராம் கூட்டணி முதன் முறையாக இணைந்து பணிபுரியவுள்ளது. அதேபோல், பி.சி.ஸ்ரீராமும் முதன் முறையாக வெப் சீரிஸுக்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.