'பெண்குயின்' படத்தை டிஜிட்டலில் வெளியிடுவதில் வருத்தமில்லை: கார்த்திக் சுப்புராஜ்

'பெண்குயின்' படத்தை டிஜிட்டலில் வெளியிடுவதில் வருத்தமில்லை: கார்த்திக் சுப்புராஜ்
Updated on
1 min read

தனது சொந்த தயாரிப்பான 'பெண்குயின்' திரைப்படத்தை சூழல் காரணமாக ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடுவதில் தங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

ஈஷ்வர் கார்த்திக் இயக்குநராக அறிமுகமாக, கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் 'பெண்குயின்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும், மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டும், ஜூன் 19 அன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது. ஊரடங்குக்கு முன் திரையரங்க வெளியீடாக திட்டமிட்டிருந்த இந்தப் படம் தற்போது கரோனா நெருக்கடி காரணமாகவும், திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்று தெளிவில்லாத நிலையிலும் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

தெலுங்கில் 'பாகுபலி 2', 'சாஹோ' படங்களுக்குப் பிறகு அதிக முறை பார்க்கப்பட்ட ட்ரெய்லராக 'பெண்குயின்' 3-ம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது:

"இந்த முடிவை எடுக்கும் முன் நாங்கள் இதன் சாதக பாதகங்களை விவாதித்தோம். திரையரங்க வெளியீடும், ஓடிடி வெளியீடும் வேறு வேறு. ஆனால் படம் ரசிகர்களைப் போய் சேர வேண்டும் என்று நினைத்தோம். எந்த இயக்குநருக்குமே அவரது படத்தை நிறைய மக்கள் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுவும் இப்போது பெரிதாக நடக்கிறது.

எல்லைகள், மாநிலங்கள், தேசங்கள் தாண்டி இப்போது இந்தப் படம் போகும். நிறைய பேர் படம் அமேசான் ப்ரைமில் வெளியாக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். படத்துக்கு நடந்திருக்கும் பெரிய (சாதகமான) விஷயம் இது. இதில் எங்களுக்கு வருத்தமில்லை.

இது எங்களுக்குப் புதியது. திரையரங்க வெளியீடென்றால் ரசிகர்களுடன் அமர்ந்து பார்ப்போம். அவர்களின் ரசனை என்னவென்று தெரியும். அதை வைத்து எங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்கும். ஆனால் ஓடிடி வெளியீடு முற்றிலும் வித்தியாசமான விஷயம். ரசிகர்கள் எதை ரசிப்பார்கள் மாட்டார்கள் என்பது பற்றி எப்படித் தெரிந்துகொள்வது என எங்களுக்குத் தெரியவில்லை.

திரையரங்குகள் திறந்த பின் படத்தை மீண்டும் திரையரங்கில் வெளியிடுவது குறித்து சிலர் கேட்கின்றனர். அது சாத்தியமில்லை. ஏனென்றால் உரிமம் முழுக்க அமேசான் ப்ரைமிடம் உள்ளது. எனவே எதிர்காலத்தில் திரையரங்கில் வெளியிட சட்டப்பூர்வமான வழி இல்லை. சாத்தியமிருந்தால் செய்வோம்"

இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in