

ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பதில் அளித்துள்ளார்.
2019-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தப் படம் 'பேட்ட'. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் தான் ரஜினியை மீண்டும் பழைய மாதிரி பார்க்க முடிந்ததாக, அவர்களுடைய ரசிகர்கள் தரப்பில் தெரிவித்தார்கள்.
இதனிடையே, பாலிவுட் இணையத்துக்கு அளித்த பேட்டியொன்றில் 'பேட்ட 2' குறித்து பேசியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"படம் எடுக்கும்போது இரண்டாம் பாகம் பற்றியெல்லாம் நினைக்கவில்லை, தோன்றவில்லை. ஆனால் படம் வெளியான பிறகு இரண்டாம் பாகத்துக்கான சாத்தியங்கள் குறித்து ரசிகர்கள் நினைத்தது சுவாரசியமாக இருந்தது. பலர் அது பற்றிக் கேட்க ஆரம்பித்தனர். சிலர் அது எப்படி இருக்க வேண்டும் என்று யோசனைகள் கூறினர்.
'பேட்ட 2' படத்துக்கான யோசனைகள் என சமூக ஊடகங்களில் எங்களுக்குச் செய்தி அனுப்புவார்கள். அவை அனைத்துமே சுவாரசியமாக இருந்தன. 'பேட்ட 2' படத்தின் கதை என்னவாக இருக்கலாம் என்பது வரை கூட சிலர் உத்தேசங்கள் கொடுத்தனர். ஆனால் இப்போதைக்கு 'பேட்ட 2'-க்கான கதை என்னிடம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் நடக்கலாம்"
இவ்வாறு கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
தற்போது தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, விக்ரம் நடிக்கும் 'சீயான் 60' படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்