

'முஃப்தி' தமிழ் ரீமேக் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துக்குப் பிறகு, சிம்பு நடிப்பில் 'மஹா' மற்றும் 'முஃப்தி' தமிழ் ரீமேக் ஆகியவை தொடங்கப்பட்டன. இதில் 'முஃப்தி' ரீமேக் படப்பிடிப்பு கர்நாடகாவில் தொடங்கப்பட்டது. ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிம்பு, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்து வந்தனர்.
கன்னடத்தில் 'முஃப்தி' படத்தை இயக்கிய நரதனே, தமிழ் ரீமேக்கையும் இயக்கி வந்தார். படப்பிடிப்பின்போதே சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை, ஞானவேல்ராஜாவுடன் பிரச்சினை உள்ளிட்ட பல செய்திகள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அதற்குப் பிறகு 'மாநாடு' மற்றும் 'மஹா' ஆகிய படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் சிம்பு. இப்போது கரோனா ஊரடங்கினால் எந்தவொரு படத்தின் படப்பிடிப்புமே நடைபெறவில்லை. தற்போது 'முஃப்தி' ரீமேக்கை மீண்டும் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
இதில் சிம்பு - ஞானவேல்ராஜா இருவருக்கும் சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும், கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் வெளியாகவுள்ளது.
'மஹா' இறுதிக்கட்டப் படப்பிடிப்பு, 'மாநாடு' மற்றும் 'முஃப்தி' தமிழ் ரீமேக் ஆகியவற்றில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் சிம்பு.