

‘புலி’, ‘உப்புக்கருவாடு’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘அஞ்சல’, ‘காத்திருப்போர் பட்டியல்’, ‘உள்குத்து’ என்று அடுத்தடுத்து ஆறு படங்கள் நடித்து முடித்திருக்கிறார், நந்திதா. அவை ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகும் உற்சாகத்தில் இருக்கும் அவரைச் சந்தித்தோம்.
‘புலி’ திரைப்படத்தில் உங்கள் பாத்திரம் என்ன என்பது ரகசியமாக உள்ளதே?
அதைப்பற்றி படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சொல்லிவிட்டால் படத்தின் ரகசியங்கள் மற்றும் அதன் மீதான எதிர்பார்ப்பு குறைந்துவிடும். படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் நான் நடிக்கிறேன். முதல்முறையாக 100 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் உருவாகும் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். இதனால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.
இப்படத்தில் ஏற்கெனவே ஸ்ருதிஹாசன், ஹன்சிகா என்று இரண்டு நாயகிகள் இருக்கிறார்களே. உங்கள் கதாபாத்திரம் அவர்களை கடந்து எப்படி ரசிகர்களின் கவனத்தைப் பெறும்?
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும்தான் நான் இதுவரை நடித்திருக்கிறேன். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ரசிகர்கள் மனதில் நான் நிற்க வேண்டும் என்பதே என் ஆசை. ‘புலி’ படத்திலும் என் ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன். விஜய் படத்தில் நடித்ததால் அவரது ரசிகர்கள் எல்லோரும் ‘தலைவி’ என்று அழைக்கிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
ராதாமோகன் இயக்கத்தில் நீங்கள் நடித்த ‘உப்புக்கருவாடு’ படமும் விரைவில் ரிலீஸாக உள்ளதே?
ராதாமோகன் மிகச்சிறந்த இயக்குநர். ஒவ்வொரு நடிகையும் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். எனக்கு அந்த வாய்ப்பு தானாகவே அமைந்தது. இப்படத்தில் நான் இரண்டு கதாபாத்திரங்களில் வருகிறேன். அதே நேரத்தில் இதில் எனக்கு இரட்டை வேடம் கிடையாது. ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்ததுபோல ஒரு உணர்வு இதில் நடித்தபோது ஏற்பட்டது.
அஜித் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க லட்சுமிமேனன் சம்மதித்திருக்கிறார். நீங்களும் அதுபோன்று நடிப்பீர்களா?
ஒரு படத்தின் கதையை வைத்துத்தான் அந்த கதாபாத்திரம் நமக்கு சரியாக வருமா என்பதைச் சொல்ல முடியும். அஜித் படத்தில் சகோதரி சென்டிமென்ட் அதிகம் இருப்பதால் அந்தப் பாத்திரத்தில் லட்சுமிமேனன் நடித்திருப்பார். அதேபோல் ரஜினி சாரின் ‘கபாலி’ படத்தில் தன்ஷிகா நடிப்பதாக கேள்விப்பட்டேன். நல்ல வாய்ப்பு. இதுபோன்ற நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நானும் நடிப்பேன்.
தினேஷுடன் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறீர்களே?
‘அட்டகத்தி’ படத்துக்கு பிறகு மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்கிறேன். 10 படங்களுக்கு பிறகு ‘உள்குத்து’ படத்துக்காக சமீபத்தில் நாகர்கோயில் பகுதியில் படப்பிடிப்பை முடித்து வந்தோம். நல்ல படம். டெக்ஸ்டைல்ஸ் கடையில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணாக இதில் நடிக்கிறேன். இதன் இயக்குநர் கார்த்திக் ராஜூ ஏற்கெனவே ‘திருடன் போலீஸ்’ படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்ததால், இதில் நடிக்கக் கேட்டதும் சம்மதித்தேன்.
போட்டோஷூட்டில் நீங்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறீர்களே?
சினிமாவுக்கு வருவதற்கு முன் மாடலிங், விளம்பர படங்களில் நடிப்பதுதான் என் பொழுதுபோக்கு, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் போட்டோஷூட் படங்களில் இருக்கும் நந்திதாதான் நிஜ நந்திதா. படத்தில் இப்போது ஏற்கும் வேடங்கள் எல்லாம் அந்தந்த படங்களுக்கான கதாபாத்திரம்தான்.
என்னை நானே இப்படித்தான் இருப்போம் என்று பார்த்துக்கொள்ளவே அடிக்கடி ஃபோட்டோஷூட் செய்து பார்த்துக் கொள்கிறேன்.