சென்னையில் முழு ஊரடங்கு: வெள்ளித்திரை, சின்னத்திரை பணிகள் மீண்டும் நிறுத்தம்

சென்னையில் முழு ஊரடங்கு: வெள்ளித்திரை, சின்னத்திரை பணிகள் மீண்டும் நிறுத்தம்
Updated on
1 min read

சென்னையில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாட்களில் வெள்ளித்திரை, சின்னத்திரை பணிகளும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து இப்போது தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு. மேலும், குறிப்பாக சென்னையில் கரோனா அச்சுறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இதனை மனதில் கொண்டு சென்னை அருகிலுள்ள 4 மாவட்டங்களுக்கு ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சில தளர்வுகள் இருந்தாலும், இரண்டு ஞாயிற்றுக்கிழமை எந்தவொரு தளர்வும் இல்லாமல் முழுமையான ஊரடங்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்புதான் இறுதிக்கட்டப் பணிகளும், சின்னத்திரை படப்பிடிப்புக்கும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் பல்வேறு படங்களின் பணிகளும், சின்னத்திரை படப்பிடிப்புகளும் தொடங்கி நடைபெற்று வந்தன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில் இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளும் நடைபெறாது என்று பெப்சி அறிவித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் அடுத்தடுத்த எபிசோட்களுக்காக சீரியல் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டன. இதனை முன்வைத்து தொலைக்காட்சிகளில் நாளை முதல் இந்த சீரியல் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என்றெல்லாம் விளம்பரப்படுத்தி வந்தார்கள். தற்போது அந்த விளம்பரங்கள் அனைத்தையுமே தொலைக்காட்சி நிறுவனங்கள் நிறுத்திவிட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in