

கமலுக்கு நடிப்பும் வேஷமும் புதிதில்லை. இரண்டு வேடங்களில் பல படங்களில் வெரைட்டி காட்டியவர்தான் அவர். மூன்று வேடத்தில் ஒரு வேடம் குள்ள அப்புவாக வந்து கலக்கியெடுத்தவர். நான்கு வேடங்களில் உருவத்தையே மாற்றாமல், மைக்கேலாக, மதனாக, காமேஸ்வரனாக, சுப்ரமணிய ராஜூவாக அசத்தி, ஹாய்ஸப்படுத்தியர். ஒரே படத்தில், பத்துவேடங்களில் நடித்து பிரமாண்டப் படத்தை இன்னும் பிரமாண்டமாக்கினார். அது... ‘தசாவதாரம்’.
எஸ்.பி.முத்துராமன், இயக்குநர் ராஜசேகர் ஆகியோருக்குப் பிறகு, இந்தப் பக்கம் ரஜினிக்கும் அந்தப் பக்கம் கமலுக்கும் பொருத்தமான இயக்குநராகத் திகழ்ந்தவர்... திகழ்ந்துகொண்டிருப்பவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். ‘அவ்வை சண்முகி’, ‘தெனாலி’, ’பஞ்சதந்திரம்’ என்று கமல் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி எல்லாமே ஹிட்டடித்தன. இந்த வரிசையில், மிகப்பிரமாண்டமான மிரட்டலாக பத்து வேடங்களில் கமல் நடித்த ’தசாவதாரம்’, இந்தியத் திரையுலகில் புதிய முயற்சி.
இன்றைக்கு கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. 12ம் நூற்றாண்டு சோழ ராஜ்ஜியத்தின் கதையையும் இன்றைய நிகழ்கால விஷயத்தையும் சேர்த்து, கேயாஸ் தியரி என்கிற அறிவியலையும் கலக்கி, வைரஸ் பரவலை ஆங்கிலப் படத்துக்கு இணையானத் தந்ததுதான் ‘தசாவதாரத்தின்’ புதிய அவதாரம்.
வைஷ்ணவத்தில் திளைக்கும் 12ம் நூற்றாண்டு பக்தன் ராமானுஜ தாசனின் கம்பீரம். கோவிந்த் எனும் விஞ்ஞானியின் புத்திசாலித்தனம், அமெரிக்க அதிபரின் மேனரிஸம், குள்ளகமலுக்கு எதிர்ப்பதமாக உயரமான இஸ்லாமிய கேரக்டர், சிதம்பரத்தில் உள்ள வயதான கிருஷ்ணவேணி பாட்டியம்மா, மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடும் பூவராகன், வடக்கத்திய மேடைப் பாடகர், வைரஸ் தேடி வருகிற வெள்ளைக்கார கமல், தங்கையைப் பறிகொடுத்து பழிவாங்க வருகிற ஜப்பானிய கமல், தெலுங்கும் தமிழுமாகக் கலந்து பேசுகிற போலீஸ் அதிகாரி பல்ராம் நாயுடு... என பத்து விரல்களைப் போலவே பத்து கேரக்டர்களிலும் வித்தியாசம் காட்ட... கமலால் மட்டுமே முடியும்.
வைரஸ் பரவல் என்கிற விஷயத்தை வைத்துக் கொண்டு, அதற்குள்ளே பத்து கேரக்டர்களையும் நுழைத்து, அதைச் சுற்றி ஏகப்பட்ட கதாபாத்திரங்களையும் இணைத்து, எந்த இடத்திலும் குழப்பமில்லாத திரைக்கதை பண்ணியிருப்பது படத்தின் கூடுதல் ஸ்பெஷல். ஜப்பானிய கமலின் ஆரம்பம், ‘எனக்குள் ஒருவன்’. அதில் ஒரு கமல் நேபாளி கமல் போல் இருப்பார். இதில் அச்சு அசலாக ஜப்பானியக் கமலாகவே பொருந்தியிருப்பார். அதேபோல், என்.டி.ஆரை நினைவுபடுத்தும் பல்ராம் நாயுடு, திரையில் வரும் இடமெல்லாம் சிரிப்புக்கு பஞ்சமிருக்காது. டான்ஸ் மாஸ்டர் ரகுராமை தன் உதவியாளராக வைத்துக்கொண்டு, அதகளம் பண்ணுவார் பல்ராம் நாயுடு.
நாகேஷ், கே.ஆர்.விஜயா, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, சந்தானபாரதி, பி.வாசு, ரேகா, ஆகாஷ், சிட்டிபாபு, மல்லிகா ஷெராவத், ஜெயப்பிரதா, அஸின் என படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். ஆனால் அத்தனைக்கும் அழகாக முடிச்சுப் போடப்பட்டிருக்கும். ஒவ்வொரு காட்சியும் கட்டமைப்பும் அத்தனை பிரமாண்டப்படுத்தப்பட்டிருக்கும்.
‘கல்லை மட்டும் கண்டால்’, ‘முகுந்தா முகுந்தா’, ‘ஓ ஓ சனம்..’, ‘உலக நாயகனே...’ என எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்டடித்தன. ஹிமேஷ் ரேஷமையா, தேவிஸ்ரீபிரசாத் இசை படத்துக்கு அழகாகப் பொருந்தின.
இயக்குநர் பி.வாசுவும் கமலும் இணைந்ததே இல்லை. வாசுவின் இயக்கத்தில் கமல் நடித்ததே இல்லை. ஆனால் இந்தப் படத்தில், பி.வாசு நடித்திருப்பார். பத்து கதாபாத்திரங்களுக்கும் பத்துவிதமான உடல்மொழிகளைத் தேர்ந்தெடுத்து, வெரைட்டி காட்ட, அதை மிகச்சிறப்பாக செதுக்கியிருப்பார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். அதிலும் அந்த க்ளைமாக்ஸ் சுனாமி காட்சியும் அந்த சண்டைக் காட்சியும் மிரட்டியெடுத்துவிடும்.
‘கடவுள் இல்லைன்னு எங்கேங்க சொன்னேன்... இருந்தா நல்லாருக்கும்னுதான் சொன்னேன்’ எனும் வசனம் இன்று வரை செம பிரபலம். எல்லா மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
‘நாயகன்’ தொடங்கி கமல் இப்படி எத்தனையோ அவதாரங்கள் எடுத்திருந்தாலும் ‘தசாவதாரம்’ கமலின் திரையுலகில், புதியதொரு பாய்ச்சல்... மற்றுமொரு விஸ்வரூபம்... இன்னொரு அவதாரம்.
‘தசாவதாரம்’ இன்னொரு வகையில் ஸ்பெஷல்தான் கமல் ரசிகர்களுக்கு. அநேகமாக, கே.எஸ்.ரவிகுமார் கமலுக்கு அளித்த அடைமொழியான ‘உலக நாயகன்’ இந்தப் படத்தில் இருந்துதான் தொடங்கியது. இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களும் கமலின் ரசிகர்களும் ‘உலகநாயகன்’ எனும் அடைமொழியை ஏற்றுக்கொள்ளும் வகையிலான அடைமொழியாகிப் போனது.
2008ம் ஆண்டு, ஜூன் மாதம் 13ம் தேதி வெளியானது ‘தசாவதாரம்’. படம் வெளியாகி, 12 வருடங்களாகிவிட்டன. இன்னமும் பல்ராம் நாயுடுவின் சேட்டைகளை நம்மால் மறக்கவே முடியவில்லை. அந்தப் பாட்டியின் குசும்புகளையும்தான்.
கமல், கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியின் ‘தசாவதாரம்’ குழுவிற்கு வாழ்த்துகள்.