

மீண்டும் விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு நடித்த படம் 'வாலு'. நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியானது. இதில் ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் மூலமாக இயக்குநரான விஜய் சந்தர், 'ஸ்கெட்ச்' மற்றும் 'சங்கத்தமிழன்' ஆகிய படங்களை இயக்கினார். தற்போது மீண்டும் சிம்பு நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பு நடந்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் நிறைவுற்ற பின், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக, 'டெம்பர்' தமிழ் ரீமேக்கில் சிம்பு - விஜய் சந்தர் இருவரும் இணைந்து பணிபுரிய இருந்தனர். ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.